(காணொளிகள்) யாழ்ப்பாணம் முற்றவெளியில் குழப்பம்! ஹரிகரனின் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்!

(காணொளிகள்) யாழ்ப்பாணம் முற்றவெளியில் குழப்பம்! ஹரிகரனின் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்!

editor 2

யாழ்ப்பாணம் முற்றவெளியில் கடந்த இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரங்கை முற்றுகையிட்டதால் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

அந்தப் பகுதிகளில் திரண்டிருந்த இளைஞர்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் கறுப்பு உடை அணிந்த சிங்கள மொழி பேசுகின்ற குழு ஒன்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதன் போது,

இளைஞர்கள் பலர் கறுப்பு உடை அணிந்த கடமையில் இருந்த சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அது குறித்த காணொளிகளும் வெளியாகியுள்ளன.

ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை உடைத்த இளைஞர்கள் அலைபோல மைதானத்தை நோக்கி ஓடியதுடன் அந்தப் பகுதிகளில் காணப்பட்ட ஒலிபெருக்கிச் சாதனங்கள் வைக்கப்பட்டிருந்த உயரமான மேடைகளில் ஏறினர்.

சம்பவத்தை அடுத்து.

தென்னிந்திய திரைத்துறை நடிகை ரம்பா மற்றும் அவருடைய கணவர் உட்பட்டோர் மேடையில் தோன்றி மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டனர். இதன் போது பொலிஸ் அதிகாரிகளும் மேடையில் தோன்றி இளைஞர்களை அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே,

பொலிஸ் அதிகாரிகளைச் சுட்டிக்காட்டிய ரம்பா, “பெரிய பெரிய அதிகாரிகளே எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போது நீங்கள் ஏன் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்” என்று கடும் தொனியில் ரசிகர்களைப் பார்த்துக் கேட்டார்.

இருந்தபோதிலும் இளைஞர்கள் தொடர்ந்தும் அரங்கை நெருங்கி குழம்பம் விளைவித்ததால் நிகழ்ச்சி இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு அடி தடிகாரணமாக சிலர் மயக்கமடைந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.

பெண்கள், சிறுவர்கள் உட்பட்ட ஏராளமானோர் நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியாது திக்குமுக்காடியதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

தென்னிந்திய நடிகை தமனாவுடன் ஒளிப்படம் எடுப்பதற்கு 30,000.00 செலுத்தவேண்டும் என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.

இது பொதுவில் பலர் மத்தியில் விமர்சனத்தைத் தோற்றுவித்திருந்தது.

முன்னதாக,

நிகழ்வின் ஏற்பாட்டாளரான ரம்பாவின் கணவன்,

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு தமது கலைஞர்கள் பலர் விரும்பவில்லை என்றும் தாமே கட்டாயப்படுத்தி அவர்களை அழைத்துவந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் என சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்திருந்தமை தெரிந்ததே.

Share This Article