பிரச்சினைகளை ஊதிப் பெருப்பிக்கும் ஊடகவியலாளர்கள் – யாழ்.மாவட்டச் செயலர் விசனம்!

பிரச்சினைகளை ஊதிப் பெருப்பிக்கும் ஊடகவியலாளர்கள் - யாழ்.மாவட்டச் செயலர் விசனம்!

editor 2

சமூகத்தை எப்போதும் ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு தற்போதுள்ள ஊகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (01) ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,   

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் நாட்டினை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லலாம். எமது பிரதேசத்தில், சவாலான விடயங்களான டெங்கு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடலாம்.

ஆனால் தற்போது இருக்கிற பிரச்சினையை இன்னும் கொஞ்சம் ஊதிப் பெருப்பித்து விட்டால், செய்தி கொஞ்சம் பரபரப்பாக போகும் என ஊடகவியலாளர்கள் செயற்படுகிறார்கள்.

அந்த விடயம் மாற்றப்பட வேண்டும். முதுகில் புண் இருந்தால் தான் காடு நுழைய பயம் என்று கூறுவார்கள். என்னுடைய முதுகில் புண் இல்லை.

நான் எதற்குள்ளும் புகுந்து விடுவேன்.   ஆனால் முதுகில் புண்ணை ஏற்படுத்துகின்ற வேலையை தற்பொழுது ஊடகவியலாளர்கள் செய்கின்றார்கள். மறைமுகமாக அச்சுறுத்துகின்றார்கள்.

ஊடகவியலாளர்கள் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த பொறுப்பை சரியாக நீங்கள் செய்ய வேண்டும்.

நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஊடகவியலாளர்களுக்கும் அதிக பங்கு உண்டு. எனவே எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Share This Article