புதிய நிர்வாகத்தை கிடப்பில் வைத்திருக்க தமிழரசுக்கட்சியின் தலைமை தீர்மானம்!

புதிய நிர்வாகத்தை கிடப்பில் வைத்திருக்க தமிழரசுக்கட்சியின் தலைமை தீர்மானம்!

editor 2

இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு திருகோணமலையில் வைத்துத் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்தை கிடப்பில் வைத்திருக்கவும் – இது தொடர்பான இறுதித் தீர்மானங்களை எடுப்பதைப் பிற்போடவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக அண்மையில் தெரிவான  சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், சிறீதரன், மாவை சேனாதிராசாவுடன் சுமந்திரன் எம். பி யும் பங்கேற்றிருந்தார்.

ஆனால், அவர் விவகாரத்தில் இணக்கமின்றி வெளியேறினார் என்றும் தெரிகின்றது. கட்சியின் தலைமைப் பொறுப்பைதாம் இன்னுமே ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கட்சித் தலைவராக மாவை சேனாதிராசாவே தொடர்கின்றார் என்றும் சிறீதரன் மேலும் தெரிவித்தார்.

‘இரண்டு தரப்புகளுக்கு இடையிலும் கொதிநிலை நிலவுகிறது. ‘வெட்டு ஒன்று ண்டு இரண்டாக’ முடிவு எடுக்க முடியாத நிலைமை உள்ளது. எல்லோரையும் சமாளித்து, அரவணைத்து, ஓர் இணக்கமான முடிவை காண வேண்டி இருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்புக்களோடு நான் நேரடியாகப் பேசவுள்ளேன். அதற்காக சற்றுக் காலம் இந்த விடயத்தில் முடிவெடுப்பதைத் தள்ளிப்போடத் தீர்மானித்துள்ளோம்.

செயலாளர் பதவி விடயத்தில்தான் இழுபறி நீடிக்கின்றது. அதுவும் திருகோணமலை – மட்டக்களப்புத் தரப்புகளுக்கு இடையிலான சிக்கலாக உள்ளது. இரு தரப்புகளும் விட்டுக் கொடுத்து, செயலாளர் பதவியை கால அளவீட்டில் பங்கிட்டு, ஏதேனும் இணக்கத்துக்கு வரமுடியுமா என்றும் பார்க்கின்றோம்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண எங்களுக்கு கால அவவாசம் தேவைப்படுகிறது. மாவை சேனாதிராசா அடுத்து வரும் நாள்களில் சிங்கப்பூர் செல்கின்றார். அவர் பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்புவார். அதன் பின்னர் இந்தப் பிரச்னை பற்றி ஆராய்ந்து ஒரு முடிவெடுப்போம்.

அதுவரை தற்போதுள்ள நிலைமை அப்படியே தொடரும்.’ – என்றும் சிறீதரன் எம். பி. கூறினார். 

Share This Article