தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் காங் கேசன்துறை இடையே பயணிகள் படகுச்சேவை எதிர்வரும் பெப். 15ஆம் திகதி தொடங்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 15 ஆம் திகதி சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்ப திட்டங்கள் நிறைவடைந்துள்ளன – என்றும் அவர் தெரிவித்தார்.
நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையிலான படகு சேவை கடந்த ஒக் ரோபர் 20ஆம் திகதி ஆரம்பமானது. செரியபாணி’ பயணிகள் படகு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் படகு சேவையின் உத்தியோகபூர்வ அறிமுகம் நடைபெற்றது.
இதன்மூலம் 40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் ஆகும். ஒரு வழிபயணத்துக்கு 26 ஆயிரத்து 750 இலங்கை ரூபாயும் இரு வழிப் பயணத்துக்கு 53 ஆயிரத்து 500 ரூபாயும் செலவாகும் என்றும் தெரியவருகின்றது.