மட்டக்களப்பில் இலங்கை சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமான அமைதிப் பேரணிக்கு வலுச்சேர்ப்பதற்காக அனைத்து வர்த்தக நிலையங்களையும் பூட்டி, அனைவரும் ஆதரவு வழங்கி, பேரணியில் கலந்துகொள்ளுமாறும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவிகள் கலந்துகொண்டு இவ்வாறு கோரியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் கூறுகையில்,
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தினை வடக்கு, கிழக்கில் கரிநாளாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த கரிநாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை அமைதிப் பேரணியை முன்னெடுக்கவுள்ளது.
75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு சுதந்திரம் பகிரப்படவில்லை. மாறாக, ஆட்கடத்தல், படுகொலைகள், நில அபகரிப்பு, வரலாற்று திரிவுபடுத்தல், ஊடக ஒடுக்குமுறை போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக தமிழர்களிடம் திணிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, அந்த கரிநாளில் வர்த்தக நிலையங்களை பூட்டி, எமது அமைதிப் பேரணிக்கு ஆதரவு வழங்குமாறும், மீன்பிடி சங்கங்களும் அனைத்து தொழிற்சங்கங்களும் மூவின மக்களும் கலந்துகொண்டு எமக்கு ஆதரவு வழங்குமாறும் அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம் என்றனர்.