குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒரு மாதத்தில் 40 ஆயிரம் பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது.

editor 2

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளதுள்ள நிலையில் குறித்த சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரை 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

அதேநேரம், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4,791 மில்லியன் ரூபாய் என மதிப்படப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களின் 725 மில்லியன் ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 9 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 25 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், ஐஸ் ரக போதைப்பொருள், ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலிடப்பட்டிருந்த 32 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை, இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு, காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேநேரம், திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தற்போது நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.

இதேவேளை, போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கான அபராத பத்திரத்தை அவர்களது அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள சீ.சீ.ரீவி அமைப்பின் ஊடாக போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் கண்காணிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், வாகன இலக்கங்களின் ஊடாக அதன் உரிமையாளர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவர்களது அருகில் காவல்நிலையங்களுக்கு குறித்த அபராத பத்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய, விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் சகல பயணிகளினதும் கைவிரல் அடையாளம் மற்றும் படங்களை எடுக்கும் செயற்பாடு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்மூலம் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Share This Article