போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் வகையில் நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் “யுக்திய“ நடவடிக்கையின் போது 943 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் 670 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய 273 பேர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .
மேலதிக விசாரணைகளுக்காக 9 சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸாரால் விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருவதுடன் கைது செய்யப்பட்டவர்களில் போதைக்கு அடிமையான 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த 32 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 199 கிராம் ஹெராயின், 168 கிராம் ஐஸ் போதைபொருள், 2 கிலோ கஞ்சா, 2,883 கஞ்சா செடிகள் மற்றும் 59 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .