இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்களுக்கு விளக்கமறியல்!

editor 2

இலங்கை கடற்பரப்பில்  மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் புதன்கிழமை மாலை உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (16) மன்னார் கடற்படையினரால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடல் தொழிலாளர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 கடற் தொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 கடற் தொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) புதன்கிழமை மாலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 18 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share This Article