குலுக்கல் பரிசு முறையில் பெருந்தொகை பணம் கிடைத்ததாகக் கூறி, அதனைப் பெற்றுக்கொள்ள 18 இலட்சம் ரூபாயை மோசடி செய்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை தொலை பேசியில் தொடர்புகொண்ட மோசடியாளர் தன்
னைத் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, தங்கள் நிறுவனம் நடத்திய குலுக்கல் பரிசில் பெருந்தொகை பணம் உங்களுக்கு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக 18 இலட்சம் ரூபாயை வரி செலுத்த வேண்டும் என்று கூறி கணக்கு இலக்கம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
இதனை நம்பிய நபர் குறித்த கணக்கு இலக்கத்துக்கு 18 இலட்சம் ரூபாயை வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர் தன்னுடன் தொடர்பு கொண்ட இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த இலக்கம் செயலிழந்திருந்தது.
இதையடுத்து, குறித்த தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்துக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போதே அவருக்கு தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதன்படி, விசாரணைகளை முன்னடுத்த பொலிஸார் தென்னிலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளை அடுத்து, இந்த மோசடிக்கு துணைபோன மற்றொரு நபரையும் கைது செய்துள்ளனர்.