தமிழரசுக்கட்சியின் தலைமைப் போட்டியாளர்கள் இன்று சந்திப்பு!

editor 2

இலங்கை தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தின்படி தேர்தல் இன்றி கட்சியின் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் போட்டியாளர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை தமக்குள் கலந்து பேசி முடிவு எடுத்து கட்சிக்கு அறிவிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுகட்சியின் செயல்குழு கூட்டம் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்
நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை கிளையில் இடம்பெற்ற நிர்வாக தெரிவு முறைகேடு
தொடர்பிலும் பேசப்பட்டது. நிர்வாகத்தில் இடம்பெறாத 6 உறுப்பினர்களையும் பொதுக் குழு கூட்டத்தில் உள்வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து தமிழரசு கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 21ஆம் திகதி நடத்துவதுடன், தேசிய மாநாட்டை 28ஆம் திகதி நடத்துவது என்ற ஏற்கனவே எடுத்த முடிவு மாற்றமின்றி பேண ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். போட்டியின்றி தலைவர் தெரிவு இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார். கட்சியின் செயல்குழுவும் இதனையே வலியுறுத்தியது.

கூட்டத்தில் பங்கேற்றிருந்த தலைமை பதவிக்கு போட்டியிடும் சி. சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோரிடம் இது தொடர்பில் முடிவை அறிவிக்குமாறும் அல்லது சுழற்சி முறையில் தலைமை பதவியை வகிப்பது குறித்து சிந்திக்குமாறும் செயல்குழுவினர் கூறினர்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் மூவரும் (போட்டியாளர்கள்) இன்று பேசி முடிவெடுப்பதாக சுமந்திரன் எம். பி. தெரிவித்தார்.

இதனை செயல்குழுவும் ஏற்றுக் கொண்டது.

இதேவேளை, தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்காக போட்டியிடும் சிறீதரனை மற்றொரு போட்டியாளரான யோகேஸ்வரன் ஆதரிக்கிறார். இதனால், போட்டியிலிருந்து சுமந்திரனை விலகுமாறு இருவரும் வலியுறுத்துவர் என்றும். அதனை அவர் ஏற்றால் சிறீதரன் எம். பியிடம் கட்சியின் தலைமையை வழங்குமாறு சிபாரிசு செய்யப்படும் என்றும் அந்தத் தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article