அரச உத்தியோகத்தர்களின் விடுமுறை எண்ணிக்கை குறைகிறது?!

editor 2

இலங்கையில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்துக்காக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நிறுவன விதிகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளை ஓய்வூதியங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் முன்வைத்துள்ளார்.

விடுமுறை நாட்களை 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் இதனூடாக முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ஓய்வூதியச் செலவு அரச செலவினத்தில் 11.4 சதவீதம் என சுட்டிக்காட்டியுள்ள ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம், செலவினங்களை நிர்வகிப்பதற்கு முழு அரச துறையினரும் பங்களிக்க வேண்டுமென குறித்த துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு 45 முன்மொழிவுகளை ஓய்வூதியத்துக்கான பணிப்பாளர் நாயகம் சமர்ப்பித்துள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் ஓய்வுபெற்ற சமூகத்தின் நலனுக்காக எதிர்பார்க்கப்படும் நிவாரணங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ;ஜகத் டி.டயஸ் முன்வைத்துள்ளார்.

Share This Article