நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேல், சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் காலியில் இருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அந்த கடற்பகுதிகளுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.