யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஊடகவியலாளரும் அரசியல் பிரமுகருமான ந.வித்தியாதரன் தற்போது ஆசிரியராக பணியாற்றும் பத்திரிகையில் “இரகசியம் பரகசியம்” என்ற பதிவினை நாளாந்தம் எழுதிவருகிறார்.
குறித்த பதிவில் இன்று கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கொடிகட்டிப் பறக்கும் வர்தகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பெருந்தொகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அது குறித்து ஊடகங்கள் தகவல்களை வெளியிடவில்லை என்றும் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.
குறித்த பதிவில் சொல்லப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் பிரமுகர் தென்னிலங்கையின் பிரபல கட்சி ஒன்றின் யாழ்ப்பாணத்தைப் பிரதிபலிப்பவரோ? என்றும் கைதாகியிருப்பவர் கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் தளமாகாக் கொண்டு செயற்படும் ஒலி, ஒளிபரப்பு ஊடகங்களை நிர்வகிப்பவர்களோ? என்றும் அவதானிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
குறித்த பத்திரிகையில் வெளிவந்துள்ள “இரகசியம் பரகசியம்” பகுதியில் வெளியாகியிருந்த பதவினை வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்கிறோம்,
அது, கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கொடி கட்டிப் பறக்கும் வர்த்தகக் குடும்பம். அண்ணன் – தம்பி இருவரும் வர்த்தகர்கள். வர்த்தகத்துக்காக அரசியலிலும் ஈடுபடுபவர்கள்.
அண்ணின் மகன் வடக்கில் அரசியல் புள்ளி.
அரசியலும் வர்த்தகமும் அண்ணன் – தம்பி உறவைக் குடும்பங்களாக பிளவுபட வைத்துவிட்டன.
தம்பியின் மகன் மூன்று தினங்களுக்கு முன்னர் தலைநகரில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சிக்கி இப்போது விளக்கமறியலில். 18 ஆம் திகதி வரை முதல் கட்ட விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய போதைப் பொருளின் பெறுமதி கோடிக்கணக்கு என்றால், சிக்கிய ரகத்தில் ஒரு சிக்கல் இருக்கின்றது – வழக்குத் தொடுக்க என்கின்றன சில வட்டாரங்கள்.
“குஷ்” என்ற ரகப் போதைப் பொருளே இப்போது சிக்கியுள்ளது. அண்மைக்காலமாகத்தான் இது நாட்டுக்குள் பிடிபடத் தொடங்கியுள்ளது. இந்த ரகப் பொருளை போதைப் பொருளாக பட்டியலிட்டு நமது நாட்டில் இன்னும் சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
அண்மைக்காலமாக அதிகமாக பிடிபடும் – மிக வலிமையான – மிகப் பெறுமதியான – “ஐஸ்” ரகப் போதைப்பொருள் கூட அண்மையில் தான் இலங்கையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளாகப் பட்டியலிடப்பட்டது.
“குஷ்” ரகப் போதைப் பொருள் இன்னும் பட்டியலிடப்படவில்லை. இந்தச் சட்ட ஓட்டை மற்றும் அரசியல் – வர்த்தகக் குடும்பத்தின் செல்வாக்கு ஆகியவை மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர் விரைவில் வெளியே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பிடிபட்டு மூன்று நாளாகியும் – விளக்கமறியலுக்குப் போய் இரண்டு நாட்கள் கடந்தும் – இந்த விவகாரம் ஊடகங்களின் வெளிவரவில்லை என்பதால் இது எவ்வளவு தூரம் High Profile Case என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இது குறித்து நான் எழுதுவது வீண் சிக்கல்களை விலைக்கு வாங்கும் வேலை என்கிறார் என் ஆசிரியர் பீட சக ஊழியர் ஒருவர்.