பாடசாலைகளுக்கான நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரச மற்றும் அரச அனுசரணையிலான தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
தற்போது பல சிறுவர்கள் பாடசாலை விடுமுறைக் காலங்களில் வீட்டிற்குள்ளேயே உள்ளனர்.
அத்துடன், பலர் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். இதன் காரணமாக, அந்த சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாகச் சுகாதார திணைக்களங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில் டிஜிட்டல் திரையூடாக காலத்தைப் போக்கும் சிறுவர்கள் தற்போது, கவலை, மனச் சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவற்றுக்குச் சிகிச்சை பெறுவதற்காக அதிகளவில் வைத்தியசாலைகளை நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுவர்கள் மீதான தங்களது பொறுப்பு குறித்துப் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், டிஜிட்டல் திரை பாவனையினால் சிறுவர்களிடையே கண் தொடர்பான குறைபாடுகளும் அதிகரித்து வருவதாகச் சிறுவர் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.