சூறாவளியாக மாறுகிறது தாழ்வு மண்டலம்!

editor 2

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது வடக்கு கடற்கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு நகர்கிறது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் இடைக்கிடையே மழைப்பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் வடக்கு, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் குறித்த கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Article