உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கத்தோலிக்க சமூகத்தினருக்கும், பேராயர் கர்தினால் ஆண்டகைக்கும் அரசாங்கம் நியாயத்தை வழங்கியுள்ளது. பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவது முற்றிலும் தவறானது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் இந்த விடயத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்.
இதனை முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றீர்கள்.கத்தோலிக்க மக்களை ஒரு கட்டத்துக்குள் கொண்டு வர பார்க்கின்றீர்கள்.
அடிப்படைவாத முஸ்லிம் தரப்பினர் சிங்களவர் ஒருவரை தலைவராக கொண்டு வர தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடுகின்றீர்கள்.சாதாரண அறிவு உள்ளவர்கள் கூட இந்த கருத்தின் உண்மையை அறிவார்கள்.
ஆகவே நண்பர் காவிந்த ஜயவர்தன அவர்களே இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம்.பேராயர் கர்தினால் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார்.கத்தோலிக்க சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடமளியுங்கள் என்றார்.