இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய தரப்புப் பிரதிநிதிகள் இந்திய மத்திய அரச மற்றும் பாஜக பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமி உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் இந்தியாவின் டெல்லி பயணமாகியுள்ளனர்.
நேற்று (நவம்பர்-29) பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட தரப்பினர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ள இக்குழுவினர் வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை டெல்லியில் முமாமிட்டு முக்கிய சந்திப்புகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் சார்பில் கூட்டாக வலியுறுத்துவதற்கான முயற்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் முன்னெடுத்திருந்தார்.
இது தொடர்பில் ரெலோ, புளொட், தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எவ், தமிழ்த் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன இணைந்து அண்மையில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும் கூட்டு ஆவணத்தில் அக்கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு அனுப்பியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இக்குழுவினர் டெல்லியில் முகாமிட்டு சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


