வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடத்தப்பட்ட வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தி தம்பதியரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்த பிரதேசத்திலிருந்து மறைந்திருந்த நிலையில் பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரதான சூத்திரதாரி உட்பட மேலும் மூவரை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் நீதிமன் றில் தெரிவித்ததையடுத்து அவர்கள் மூவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்தும், அவர்களை கண்ட இடத்தில் கைது செய்யுமாறும் நீதிமன்றில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பிறந்தநாள் விழா நடந்த வீட்டுக்கு வேறு பிரதேசத்தில் இருந்து வந்து தம்பதியை கொலை செய்ய இரண்டு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றதாகவும், அதில் 25 இலட்சம் ரூபாய் முன்பணமாக பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த தாக்குதல் மூலம் உயிரிழந்த பெண்ணுக்கும் மற்றுமொரு நபருக்கும், உயிரிழந்த ஆணுடன் மற்றொரு பெண்ணுக்கும் உள்ள திருமணத்துக்கு புறம்பான தொடர்பு காரணமாக கொலை ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.