தென் அந்தமான் கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம்!

editor 2

தென்அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது என்று சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் நாளையளவில் மேலும் தீவிரமடைந்து  தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல்பிராந்தியத்திற்கு மேலாக காணப்படும். 

ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வு கூறல்களை கவனித்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

திருகோணமலை   தொடக்கம் பொத்துவில், ஹம்பாந்தோட்டை, காலி ஊடாக புத்தளம்  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சிலாபம் தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article