திருமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு நீதிமன்று நிபந்தனையுடன் அனுமதி!

editor 2

திருகோணமலை மாவட்டம் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை முன்னெடுக்க தடை விதிக்க கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த மூதூர் நீதிமன்றம் நிபந்தனையுடன் நினைவேந்தலுக்கான அனுமதியினை வழங்கியுள்ளது.

பொது சுகாதாரத்திற்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பங்கமில்லாமல் மாவீரர் நினைவேந்தலை நடத்தலாமென மூதூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பூர் – ஆலங்குளம் பகுதியில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்குமாறு கோரி மூதூர் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சட்டத்தரணி தேவராஜ் ரமணனால் இந்த நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் இது தொடர்பில் வாதம் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் மூதூர் நீதிமன்றத்திற்கு வருகை தந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக திருகோணமலை – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக கடந்த 23.11.2023ஆம் திகதி மூதூர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிக்கையை பார்வையிட்ட மூதூர் நீதிமன்ற நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஷான், பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 17 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பொது சுகாதாரத்திற்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பங்கமில்லாமல் மாவீரர் நினைவேந்தலை நடத்தலாமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share This Article