கட்டடத்தில் இருந்து தவறிவீழ்ந்து கோமா நிலையில் இருந்த தொழிலாளி ஒருவரும், முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்த யுவதி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மத்திய கிழக்கு நாடான டுபாயில் கட்டட வேலைக்குச் சென்ற தெல்லிப்பழையை சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற குடும்பஸ்தர் கடந்த ஆண்டு கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்து கோமா நிலைக்கு சென்றிருந்தார்.
கடந்த ஓராண்டாக கோமா நிலையில் இருந்த அவர் கடந்த 17ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டார். தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதேபோன்று, முச்சக்கரவண்டி மோதியதில் படுகாயமடைந்து யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 22ஆம் திகதி மாலை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பளை – செல்வபுரத்தை சேர்ந்த குணாளன் மதுஜா (வயது 19 ) என்பவரே உயிரிழந்தார்.
பளை மருத்துமவனையில் சேர்க்கப்பட்ட இவர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன் தினம் இரவு உயிரிழந்தார்.