மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் அமைதியான முறையில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்று சட்டத்தரணி எஸ். டினேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிராக அடம்பன் பொலிஸார இன்று (நேற்று) மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.
குற்றவியல் நடைமுறைக்கோவை 106 ஆவது பிரிவின் கீழ் இத்தடை உத்தரவை அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு பதில் நீதிவான் இ. கயஸ்பெல்டானோ முன்னிலையில் இடம்பெற்றது.
விசாரணையின்போது, நினைவேந்தலை அமைதியான முறையிலும் – பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் நினைவுகூர மன்னார் நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலை புலிகளுக்கு சொந்தமான இலச்சினைகள் மற்றும் கொடிகளை பயன்படுத்தாமல் அமைதியான முறையிலான நினைவுகூரலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது – என்று சட்டத்தரணி தெரிவித்தார்