கிரிக்கெட் நிர்வாக சபை விவகாரம்; விலகினார் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்!

editor 2

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை விதித்த  விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன செவ்வாய்க்கிழமை விலகியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு  அறிவித்தார்.

இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தலைமை   நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

Share This Article