இன்று காலை தொடக்கம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய அதிகாரிகளின் போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியுடன் இடைநிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சுகாதார அமைச்சுத் தரப்புக்கும் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கிளை செயலாளரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான இணைப்பாளருமான வைத்திய அதிகாரி விஜயரட்ணசிங்கம் – தர்சன் tamilnews.lk இக்குத் தெரிவித்தார்.
எதிர்வரும் 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் அந்தச் சந்திப்பின்போது பேச்சுக்களில் முன்னேற்றம் இல்லையேல் தொடர்ந்தும் 10ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் தமது கோரிக்கைகள் தொடர்பிலான தெளிவூட்டல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானத்திற்கு அமைய நேற்று ஊவா மாகாணத்தில் தொடங்கிய போராட்டம் இன்று வடக்கு மாகாணத்தில் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.