‘கோட்டாபய அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது நாமல் ராஜபக்ஷ
கேள்வி கேட்க தைரியம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தார்.’ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக பதுங்கி இருந்தார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர்கள் இருவரும் தற்போது நாய்களை போல் குரைப்பதாகவும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியமை குறித்து ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மன்றும் சாகர காரியவசம் ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட போது நிமல் லான்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி விஞ்ஞான ரீதியாக இலாகாக்களை ஒருங்கிணைத்துள்ளார்.
இது ஒரு பயனுள்ள முடிவு என்றும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
‘நாமலும், சாகரவும் அதை எதிர்த்துப் பேசினால், அவர்கள் தங்கள் தலையில் ஏதேனும் அசாதாரணம் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
‘அரசாங்கத்திலிருந்து வெளியேறும் தைரியம் சாகரவிற்கு உள்ளதா என்று நான் சந்தேகிக்கிறேன்.
ஏனெனில் அது அவர்கள் அனைவரையும் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் தள்ளக்கூடும்,’ என்று அவர் மேலும் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது நாமல் ராஜபக்ச மிகவும் அமைதியாக இருந்தார்.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில அமைச்சுக்களை மாற்றியமைத்த போது, ‘பயனற்ற சண்டி பேச்சுக்களை’ பேசுகின்றார்.
‘கோட்டாபய ராஜபக்சவை கேள்வி கேட்க நாமலுக்கு ஏன் தைரியம் வரவில்லை?
நாமலும், சாகரவும் அவர்களின் தலையை சோதிக்க வேண்டும். நாட்டை அழித்த பிறகு பேசுகின்றார்கள்’ என்று லான்சா கடுமையாக சாடினார