இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமானது ஏனைய நாடுகளில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணையாக மொரோக்கோவின் மராகேஷில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பல சிரமங்களை எதிர்கொண்ட போது, அது ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தது.
எனினும், கொவிட் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நிலை வீழ்ச்சியடைந்ததுடன் குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கை மாறியது.
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை மிகவும் சிறந்த மற்றும் விரைவான தீர்மானங்களை எடுத்துவருவதாகவும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கட்டமைப்பிற்குள் கடன் தீர்வுகள் தொடர்பில் கொள்கை அளவில் உடன்பாட்டை எட்டுவதற்கு தாம் செயற்பட்டு வருவதாக இலங்கையின் தனியார் கடன் வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.