தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் வெகுவிரைவில் மருத்துவர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத் தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிய கடிதங்கள் எவையும் சென்றடையவில்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
எனவே, இந் தியப் பிரதமரை நாங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?’ – என்று சுமந்திரனிடம் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘அந்தக் கடிதங்கள் இந்திய பிரதமரிடம் சென்றடைந்துள்ளன. விக்னேஸ்வரன் வெகுவிரைவில் மருத்துவர் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றுதான் நான்
நினைக்கின்றேன்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்களை சந்தித்தபோது இந்த விடயங்கள் (கடிதங்கள்) பிரதம மந்திரியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெளிவாகவே சொல்லியிருந்தார்.
அதற்கு முன்னர் கடிதங்களை எடுத்துச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர், அந்தக் கடிதங்களை இந்தியப் பிரதமரிடம் கையளித்தவுடனேயே புதுடில்லியிருந்து எனக்குத்
தொலை பேசி அழைப்பு எடுத்து கடிதங்களைப் பிரதமரிடம் கையளித்துவிட்டேன் என்று அறிவித்திருந்தார்.
எனவே, எல்லா கடிதங்களுடம் இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால்பாக்லே ஆகியோர் அதனை எம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே, அவர்கள் அது தொடர்பில் எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய தேவையும்
இல்லை பொய் சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கவும் இல்லை. விக்னேஸ்வரனுக்கு மறதி வியாதி ஏற்பட்டிருக்கலாம்.
அது வேறு பிரச்சினை. இந்திய பிரதமரை சந்திப்பது தொடர்பில் விக்னேஸ்வரன் மின்னஞ்சலில் (இப்போது) அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கவில்லை. நான் கட்சித்
தலைவர் இல்லைதானே. கட்சித் தலை வர்களுக்குத்தான் அவர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முக்கியமான விடயங்கள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடுவார்.
ஆனால், விக்னேஸ்வரனின் கடிதத்தை அவர் முக்கியமான விடயமாகக் கருதவில்லையோ தெரியவில்லை, அந்தக் கடிதம் தொடர்பில் என்னுடன் சம்பந்தன் எதுவும் பேசவில்லை. இந்தியாவின் முக்கிய வகிபாகத்தை நன்றாக அறிந்த தலைவர் தான் சம்பந்தன். அதற்கேற்ற மாதிரி அவரின் செயல்பாடுகள் இருக்கும்.’ – என்றார்.