நாடு திரும்ப அனுமதி கோரி சாந்தன் மனு! விலகினார் நீதிபதி!

editor 2

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன், தம்மை இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவை விசாரணை செய்வதில் இருந்து சென்னை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று விலகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் என்ற டி.சுதேந்திரராஜாவே குறித்த நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தம்மை நாடு கடத்துமாறு கோரி மத்திய உள்துறை அமைச்சுக்கும், தமிழக அரசாங்கத்திற்கும் உத்தரவிடக் கோரி, அவர் அந்த நீதிப்பேராணை மனு ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த மனுவை விசாரணை செய்வதில் இருந்து சென்னை மேல் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் விலகியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணியான பி. புகழேந்தி ஊடாக தாக்கல் செய்த மனுவில்இ தாம் இலங்கைப் பிரஜை என்றும், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தாம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சாந்தன் தெரிவித்துள்ளார்.

தாம் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படும் வரை சிறப்பு முகாமின் எல்லையை விட்டு வெளியேறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சு, 2022 நவம்பர் 11ஆம் திகதியன்று உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமது தாயாரின் நலன் கருதி தாம் உடனடியாக இலங்கை செல்ல விரும்புவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அளித்த மனுக்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்றும் சாந்தன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

Share This Article