யாழ், வன்னியில் வழிப்பறிக் கொள்ளை; சந்தேக நபரை சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

editor 2

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற குற்றச்செயலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குறித்த நபரை பொலிஸார் தேடி வந்தனர்.

அதன் போது அந்நபர் அல்வாய் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, அவரது உறவினர்களான பெண்கள் உள்ளிட்டவர்கள், பொலிஸாரின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தனர்.

அதனால் அங்கிருந்து திரும்பிய பொலிஸார் மீண்டும் இன்றைய தினம் மேலதிக பொலிஸாருடன் அப்பகுதிக்கு சென்று சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் பொலிஸாரை தாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளார். அத்துடன் உறவினர்களும் அவ்விடத்தில் கூடி பொலிஸாரின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தனர்.

அவ்வேளை சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் . மேற்கொண்டதில், சந்தேகநபர் காயமடைந்தார். இதன் பின்னர் பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

Share This Article