பிக்பாஸ் 07; 06 ஆம் நாள்- நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

editor 2

ஜெயகாந்தனும் அதிகம் படிக்காதவர். ஆனால் படித்தவர்களை விடவும் தன்னை அதிக உயரத்திற்கு பிறகு மேம்படுத்திக் கொண்டார்.

ஏழாம் சீசனின் முதல் பஞ்சாயத்து நாள். கல்வி, சுகாதாரம், தனிநபர் சுதந்திரம், பச்சை குத்தியது, இச்சை அடைந்தது, எச்சை துப்பியது என்று கமல் விசாரிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் காத்துக் கொண்டிருந்தன. இவற்றில், குறிப்பாக கல்வி என்னும் விஷயத்தில் அவரின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருந்தது.

யாருடைய தரப்பையும் மறுக்காமல், யார் மனதும் புண்படாமல் அதே சமயத்தில் தான் சொல்ல வந்ததை அழுத்தமாகவும் பரந்து பட்ட பார்வையுடனும் சமயோசித நகைச்சுவையுடனும் பொழிப்புரை ஆற்றி கமல் வசீகரித்து விட்டார். கல்வி தொடர்பாக விசித்ரா சொன்னது முற்றிலும் சரியான விஷயம். ஆனால் அவர் சொன்ன விதத்தில் அதட்டலும் அதிகாரமும் இருந்ததால் வீட்டில் உள்ள இளைய தலைமுறையினர் உள்ளிட்டு அனைவரும் ரசிக்கவில்லை.

ஒரு விஷயத்தில் என்ன சொல்கிறோம் என்பதோடு எப்படிச் சொல்கிறோம் என்பது மிக முக்கியம். இங்குதான் ஒரு கனிவான நல்லாசிரியரின் இடம் தேவைப்படுகிறது. பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை தொகுப்பாளரான கமல் அந்த இடத்தை ஒவ்வொரு சீசனிலும் சரியாகவே நிரப்பி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 6 EP7)

ஜீன்ஸ், டீஷர்ட் என்று காஷூவலான உடையில் வந்த கமல், தன் கருத்துக்களையும் காஷூவலான பாணியில் அதே சமயத்தில் ஆழமாக சொன்னது சிறப்பு. ‘வெவ்வேறு பின்னணி, வயது, தலைமுறை, அனுபவம் கொண்டவர்கள் வந்திருக்கிறார்கள். தலைமுறை இடைவெளிதான் முதல் வாரத்தை சுவாரசியமாக்கியிருக்கிறது’ என்கிற முன்னுரையுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்த கமல், வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார்.

“ஜோவிகா நல்ல பொண்ணுதான். எனக்குத் தெரியும். ஆனா யாரோ அவளை இன்ஃபூயன்ஸ் பண்ணியிருக்காங்க. எங்க, என்ன பண்ணனும்னு தெரிஞ்சுதான் அவ இங்க வந்திருக்கா.. இனிமே என்னை அவ ‘மேம்’ன்னுதான் கூப்பிடணும்’ என்றெல்லாம் பிரதீப்பிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விசித்ரா.

இளைய தலைமுறையினர் செய்யும் பெரும்பாலான விஷயங்கள் முந்தைய தலைமுறையினருக்குப் பிடிக்காது என்பதுதான் நடைமுறை இயல்பு. ஆனால் இது தொடர்பான உபதேசத்தை கனிவாகவும் தோழமையாகவும் சொன்னால்தான் எடுபடும். சொல்ல வந்த விஷயமும் இளையவர்களுக்குச் சென்று சேரும். மாறாக விசித்ராவைப் போல் கோபமாகவும் அதட்டலாகவும் சொன்னால் வெறும் கசப்பும் பகைமையும்தான் மிஞ்சும். இளம் தலைமுறை கடந்து கொண்டிருக்கும் அதே மனநிலையை கடந்துதான் பெரியவர்களும் வந்து சேர்ந்திருப்பார்கள். எனில் அந்த இடத்தில் நின்று யோசிப்பதும் பெரியவர்களின் அவசியமான கடமை. அனுபவம் என்பதின் மதிப்பே அதுதானே?!

முகபாவத்தை மட்டுமே தந்து விடையை கண்டுபிடிக்கும் ஒரு விளையாட்டில் கூல் சுரேஷ் செய்த வில்லங்கமான கொனஷ்டைகளை மாயா ரசிக்கவில்லை. எனவே சுரேஷிடம் நேரடியாக சென்று தனது ஆட்சேபத்தைச் சொன்னது நல்ல விஷயம். ‘புரளி பேசும் இடம்’ என்கிற போர்டு சுரேஷ் படுக்கையின் மேலே தொங்கிக் கொண்டிருந்தது.

‘பச்சை குத்திக் கொள்வதை விடவும் என் தோல் முக்கியம்’

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் ‘யாவரும் கேளிர்’ன்றதுல நம்பிக்கை உள்ளவன் நான்.. எனவே ரெண்டு வீட்டாரும் ஒண்ணா வந்து உக்காருங்க’ என்று சொல்லி விட்டு ‘எப்படி இருந்தது முதல் வார அனுபவம். சொல்லுங்க.’ என்று ஆரம்பித்தார். ஒவ்வொருவரும் தங்களின் சங்கடங்களைச் சொல்ல, பூர்ணிமாவோ “பார்க்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு’ என்று வாய் விட்டு மாட்டிக் கொண்டார். ‘அப்ப வெளில நின்னு வேடிக்கை பார்க்கற மாதிரி தெரியுது’ என்று கமல் நைசாக ஒரு காமெடி குண்டூசியை செருகினார். “இங்க இருக்கற கொஞ்ச பேரையாவது புத்தகம் வாசிக்கிறவர்களாக மாற்றினால் சந்தோஷம்’ என்று பவா செல்லத்துரை சொன்னது நல்ல விஷயம். எனில் அவர் உள்ளே வந்ததின் நோக்கம் நிறைவேறும். (ஆனா கதையை ஒழுங்கா சொல்லிடுங்க பவா. கமல் வந்து கரெக்ஷன் பண்ற மாதிரி ஆயிடக்கூடாது!).

விநோதமான ஒப்பனையில் இருந்த ‘கூல் சுரேஷின்’ முறை வந்த போது அவர் பேச ஆரம்பிக்கும் முன்பே பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் வந்தது. ‘ஒரு நாள்ல இவ்ள நேரம் இருக்குன்னு இங்க வந்துதான் தெரிஞ்சது’ என்று அக்ஷயா சொன்னது முக்கியமான பாயிண்ட். செல்போன் உள்ளிட்டு பல விஷயங்களில் நாம் ஒவ்வொரு நாளின் பல நிமிடங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம்.

அடுத்ததாக ஒவ்வொரு பிரச்சினையாக ஆரம்பித்து நூல்கண்டு சிக்கல் போல ஒவ்வொன்றையும் நுட்பமாக அவிழ்க்க ஆரம்பித்தார் கமல். முதலில் அனன்யாவின் ‘டாட்டூ’ பிரச்சினை. ‘விசித்ரா என் சுதந்திரத்தில் தலையிட்டு என்னை தப்பாக சித்தரிக்க முயல்வது போல் தெரிகிறது.’ என்று அனன்யா சொன்ன புகாரை அப்படியே மறுத்தார் விசித்ரா.

‘போட்டுக்கக் கூடாதுன்னு சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது. எனக்கும் டாட்டூ பிடிக்கும். அதை விடவும் என் தோல் ரொம்பவும் பிடிக்கும். என் பொண்ணு கூட முதுகுல ஸ்ருதின்னு பச்சை குத்தியிருக்கா. நான் வெச்ச பேரை போட்டுத்தான் காட்டணுமான்னு நான் கேட்க மாட்டேன்.” என்று கமல் சொன்ன சுவாரசியமான விளக்கத்தைச் சற்று கவனித்துப் பாருங்கள்.

கமலுக்கு டாட்டூ போடுவதில் உள்ள விருப்பமின்மையையும் தெரிவித்து விட்டார். அதே சமயத்தில் மற்றவர்களின் உரிமையில் தலையிடாத நாகரிகத்தையும் இணைத்து பதிவு செய்து விட்டார். இந்த எபிசோடு முழுக்க இந்தச் சமநிலையான அணுகுமுறைதான் கமலின் விசாரணைகளில் தெரிந்தது. இதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை. இந்தச் சமூகத்தில் எல்லாத் தரப்புகளுக்கும் இடம் தரப்பட வேண்டும். ‘நான் நினைப்பதுதான் சரி’ என்று கறாராக நிற்பது முரட்டுத்தனமான பழமைவாதம்.

‘இது தலைமுறை இடைவெளி பிரச்சினை. இளையதலைமுறையினருக்கான சுதந்திரம் குறையக்கூடாது. அவர்களுக்கான மரியாதையும் குறையக்கூடாது’ என்று கமல் சொன்னது சிறப்பான வாசகம். இளையோருடன் கடுமையாக முரண்பட்டு நின்றால் வெறும் பகைமையுணர்ச்சி மட்டுமே எஞ்சும். செல்ல வேண்டிய உபதேசமும் சென்று சேராது.

அடிப்படைக் கல்வி அவசியம். ஆனால் கல்விக்கான பாதைகள் பல

இதே சமநிலையான அணுகுமுறையைத்தான் ஜோவிகா Vs கல்வி விஷயத்திலும் கமல் கடைப்பிடித்தார். “குடும்பத்தைக் காப்பாத்த கல்வியாலதான் முடியும்ன்ற நிலைமைல எத்தனையோ போ் இருக்காங்க. அவங்க படிச்சுதான் ஆகணும். அதில் மாற்றமில்லை. ஆனா உயிரைக் கொடுத்தாவது கல்வின்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது. இதுதான் கல்வின்னு எதையும் சொல்லிட முடியாது. கல்லாதது உலகளவு. விசித்ரா ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா அவங்களோட பின்னணி அப்படி. கேரளாவுல ‘படி.. படி’ன்னு சொல்லி ஒரு தலைமுறையையே கடைத்தேற்றிட்டாங்க. ‘தமிழ் மொழி தெரியுமா?’ன்னு கேட்டாங்க. அது ஒரு மொழிதான். நான் கூட படிக்கலை. அப்புறம் விட்டத பிடிச்சிட்டேன். ஜோவிகா என்ன முடிவு பண்ணனும்னு அவங்க முடிவு பண்ணிக்கட்டும்” என்று ஒரு நீண்ட லெக்சரே தந்தார் கமல்.

‘கல்வி முக்கியமானது’ என்று கமல் அழுத்தம் திருத்தமாக சொல்லவில்லையே என்று பார்வையாளர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அந்தப் புள்ளியை கமலோ ஜோவிகாவோ துளி கூட மறுக்கவில்லை. கல்வியின் மூலம்தான் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இந்தியச் சமூகத்தின் கணிசமான பகுதி இருக்கிறது. கல்வியைப் பற்றிக் கொண்டுதான் பொருளாதார நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் பலருடைய நிதர்சனம். ஆனால் இதையும் தாண்டி சற்று யோசிக்க வேண்டும். இத்தகைய கல்வி ஒரு மனிதனுக்குள் தரும் அகமாற்றம் என்ன?

பொருளீட்டுவதற்கு மட்டும் கல்வி அல்ல. பண்பும் முக்கியம்

‘எல்லோருமே நல்லாப் படிச்ச ஒரு குடும்பத்துலதான் மருமகளை பெட்ரோல் ஊத்திக் கொன்னாங்க’ என்று கமல் சொன்ன உதாரணம் சரியானது. நன்றாகப் படித்தும் தனது காட்டுமிராண்டித்தனங்களை ஒருவன் கைவிடாவிடில் அவன் படித்ததின் பொருள் என்ன? அடிப்படையான கல்வி முக்கியம் என்பதில் மறுப்பில்லை. ஆனால் அதையும் தாண்டி கற்க விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. வெறுமனே பொருள் ஈட்டுவதற்காக மட்டுமே கல்வியைப் பயன்படுத்துவதின் மூலம் கல்வியை அவமதிப்பு செய்கிறோம் என்பதுதான் உண்மை. ஒரு நல்ல மனிதனாகவும், நாகரிகமான குடிமகனாகவும் மாற வேண்டும் என்பதுதான் கல்வியின் அடிப்படையான பயன்பாடு.

இந்தச் சமயத்தில் விசித்ரா தனது பின்னணியைச் சொன்னது முக்கியமானது. ‘எனக்கு படிக்க நெறைய ஆர்வம். நான் +2 படிக்கும் போதே குடும்பக் கஷ்டம் காரணமா நடிக்க வந்துட்டேன். பிறகு ‘கவர்ச்சி நடிகை’ன்ற அடையாளத்தை மாற்றுவதற்காக மேலே நிறைய படிச்சேன்’ என்றார். முதலில் முடியவில்லையென்றால் கூட பிறகு ‘விட்டத பிடிச்சுடலாம்’ என்று கமல் சொன்னது இதைத்தான். ஆனால் பாருங்கள், உளவியலில் டாக்டரேட் படித்த விசித்ராவால் தனது அபிப்ராயங்களை இதமாகச் சொல்லி இளைய முறையினரை கேட்க வைக்க முடியவில்லை. வீட்டில் வெறும் கசப்பும் சண்டையும்தான் நீடிக்கிறது. ஆனால் ‘படிக்காத’ கமல்ஹாசன், இதே விஷயத்தை எவருடைய மனதும் நோகாமல் கையாள்வதில் கணிசமான வித்தியாசம் இருக்கிறது.

‘கற்றல் விதி இருக்கலாம். கற்றல் வதையாக மாறி விடக்கூாது. இது அவங்க அவங்க நியாயம். ஜெனரேஷன் கேப்ன்ற பள்ளத்துல பெரியவங்க விழுந்துடக்கூடாது. ஜோவிகாவும் நடிப்பு தொடர்பா படிச்சுட்டு இருக்காங்க.. விசித்ரா வயசுல அவங்க நெறய டிப்ளமோ முடிச்சிருப்பாங்கன்னு நம்பறேன்’ என்று சொன்ன போது முதன் முறையாக ஜோவிகாவின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. இதுதான் ஆரோக்கியமான அப்ரோச். இந்த நற்பண்புகளைத்தான் ஒரு மனிதனுக்கு கல்வி தர வேண்டும். பொருளீட்டும் சாதனமாக மட்டுமே கல்வி பயன்படக்கூாது.

கமல் இத்தனை சொல்லி விட்டு பிரேக் விட்டாலும் அந்த மாற்றம் விசித்ராவிடம் ஏற்படவில்லை. அதுவரை அணிந்திருந்த புன்னகையை கழற்றி வைத்து விட்டு ‘இனிமே என்னை ‘மேம்’ன்னு கூப்பிடு. விச்சுன்னு சொல்லக்கூடாது’ என்று கடுகடுத்த முகத்துடன் சொல்ல “இவ்ள ஆக்ரோஷம் தேவையில்லை’ என்று பதிலுக்கு எரிச்சலானார் ஜோவிகா. “அடிப்படையான கல்வி முக்கியம்ன்னு சொன்னது ஒரு தப்பா?’ என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் விசித்ரா.

படிப்பு ஒரு மனிதனுக்கு என்ன தருகிறது? என்பதற்கான இன்னொரு உதாரணம் பிரதீப். மனிதர் பல சமயங்களில் சிறப்பாக லாஜிக் பேசுகிறார். பிக் பாஸ் விளையாட்டை திறமையாக ஆடுகிறார். ஆனால் சில சமயங்களில் மோசமாக நடந்து கொள்கிறார். மனிதர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளத் தெரியவில்லை. எப்போதும் யோசிக்கிறார். குழம்புகிறார். சுயபச்சாபத்தில் அழுகிறார். ‘நீ எனக்கு ஆறுதல் சொல்ல வர்றது கூட சந்தேகமா இருக்கு” என்று கட்டியணைத்த விஷ்ணுவிடம் சொல்லி அவரையும் காண்டாக்கி ஓட வைத்தார். எனில் பிரதீப் கற்ற கல்வியின் பயன்தான் என்ன?

பவாவின் ‘பாவக் கதையில்’ கமல் சொன்ன திருத்தங்கள்

ஒரு பிரேக் விட்டு திரும்பி வந்த கமல், பவா பகிர்ந்து கொண்ட ஜெயகாந்தன் தொடர்பான சம்பவத்தில் சில திருத்தங்களைச் சொன்னார். ‘காலை இறக்குடா’ என்று ஒரு ரசிகர் கத்தி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதும் “ஓ.. சாரி.. சாரி..’ என்று ஜெயகாந்தன் மன்னிப்பு கேட்டு உடனே காலை இறக்கிக் கொண்டார். இது ஜெயகாந்தனின் பெருந்தன்மை. ‘உங்களுக்குச் சமமாக இறங்கி வருவதில் எனக்கொன்றும் சிரமம் இல்லை’ என்றொரு வசனம் ‘பாரதி’ திரைப்படத்தில் வரும்.

ஜெயகாந்தனும் அதிகம் படிக்காதவர். ஆனால் படித்தவர்களை விடவும் தன்னை அதிக உயரத்திற்கு பிறகு மேம்படுத்திக் கொண்டார். அந்தக் காலத்திலேயே அவருடைய சிந்தனை எத்தனை முற்போக்குத்தனமாக இருந்தது என்பது அவர் எழுதிய படைப்புகளின் மூலம் புரியும். ‘ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டதின் மூலம் இன்னமும் அதிக உயரத்திற்கு சென்றது ஜெயகாந்தன்தான். ஆனால் இந்தச் சம்பவத்தை பவா விவரிக்கும் போது ‘ஜெயகாந்தன் இன்னமும் வசதியாக காலைப் போட்டுக் கொண்டார்’ என்று மாற்றிச் சொன்ன போது பொருளே மாறி விடுகிறது.

அடுத்ததாக பவா சொன்ன ‘பாலச்சந்திரன் சுள்ளிக்காடு’ அனுபவக் கட்டுரையைப் பற்றி பேச ஆரம்பித்த கமல் ‘அதன் மூலம் என்ன புரிந்து கொண்டீர்கள்?’ என்று போட்டியாளர்களை விசாரிக்க ஆரம்பித்தார். முதலில் எழுந்த நிக்சன், “பவா சொல்ற கதைகள் என்னை மிகவும் பாதிக்குது. இந்தக் குறிப்பிட்ட கதையின் மூலம் அந்த மாதிரி தப்பு செய்யக்கூடாதுன்னு புரியது” என்றது அருமை. `நீங்களும் இந்த தவற்றைச் செய்யுங்கள்’ என்று அந்தக் கட்டுரை ஊக்குவிக்கவில்லை.

பிறகு பாலச்சந்திரனின் கட்டுரையை தன்னுடைய பாணியில் கமல் விவரித்தது சிறப்பு. பவா செல்லத்துரை சொன்ன போது ஏற்பட்ட முக்கியமான விடுபடல்களையும் விளக்கி “அந்தப் பெண் மன்னிப்பு கேட்டதின்’ அசலான அர்த்தத்தை கமல் எடுத்துச் சொன்னது அருமை. ஆனால் கமலின் விளக்கம் தந்த ப்ளோவிலும் சில பிசிறுகள் இருந்தன. ‘இது பவா எழுதிய கதை இல்லை. பாலச்சந்திரன் எழுதிய சுயசரிதையின் பகுதி’ என்று சரியாக ஆரம்பித்த கமலே பிறகு ஒரு ப்ளோவில் ‘கதை’ என்று சில இடங்களில் சொன்னார். இது போல. ‘கவிஞரும் அவரது மனைவியும் அந்தப் பெண்ணின் திருமணத்திற்குச் சென்றார்கள்’ என்று கமல் சொன்னதும் தவறு. புதிதாக மணமான அந்த பெண், மரியாதை நிமித்தம் தனது கணவரை அறிமுகப்படுத்துவதற்காக கவிஞரின் வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவர்கள் கிளம்பிச் செல்லும் போதுதான் கவிஞரின் பழைய நினைவுகள் துவங்குகின்றன. அதன் மூலம்தான் அந்தக் கட்டுரை விவரிக்கப்படுகிறது.

கதை சொல்லிகளுக்கு நேரும் இயல்பான விபத்துக்கள்

ஒரு கதையை எடுத்து விவரிக்கும் போது அதில் சில தன்னிச்சையாக இடைச்செருகல்களும் இணைப்புகளும் விடுபடல்களும் நிகழும். இது இயல்பான விஷயம். ‘வெண்ணைக்கட்டி மாதிரியான இடுப்பு’ என்று பவா விவரித்தது ஒரு கதைசொல்லிக்கு நிகழும் இயல்பான இடைச் செருகல். அந்தத் தனிமையான தருணத்தில், அந்தக் கவிஞரிடம் அப்படியொரு வக்கிரமான கிளர்ச்சி எழுந்தது’ என்பதை உருவகமாக உணர்த்துவதற்கு சொல்லப்பட்ட வார்த்தை அது. அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்காமல் ஒட்டுமொத்த படைப்பின் மையத்தை உணர்வதுதான் சிறந்த வாசிப்பு. (அதாவது நிக்சன் செய்தததைப் போல!). ஆனால் பவா சறுக்கியது போல ஒரு படைப்பின் அர்த்தத்தையும் தலைகீழாக மாற்றுவது போல் சொல்லி விடக்கூடாது.

கதை சொல்லிகளுக்கு இயல்பாக நேரும் விபத்துக்களை தன்னுடைய அனுபவத்தின் மூலமாகவும் பகிர்ந்து கொண்டார் கமல். ‘ஜெப்ரி ஆர்ச்சரிடம் அவர் எழுதிய ஒரு கதையை விவரிக்கும் போது தான் இணைத்துக் கொண்ட விஷயங்களையும் விளக்கி கமல் பகிர்ந்த விதம் சிறப்பானது. அதில் தனது டிரம்ப்பெட்டையும் சாமர்த்தியமாக இணைத்து ஊதிக் கொண்ட பாணியில் கமலின் திறமை தெரிந்தது.

ஓர் இலக்கியப் பகிர்வு நிகழும் போது அங்கு எழுத்தாளனின் பங்கு மட்டும் முக்கியமில்லை. வாசகனின் பங்களிப்பும் முக்கியமானது. ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்கிற பழமொழி முக்கியமானது. ஒரு நல்ல வாசகர்களால்தான் ஒரு படைப்பு இன்னமும் அதிகமாக மேம்படும். “பவா இறுக்கமாகி விட்டதற்கு அந்த வீட்டின் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று பவாவிற்கு சப்போர்ட் செய்வது போல் கமல் பேசியதால் மிகவும் ஆறுதல் அடைந்தார் பவா. ‘என் மனசைப் படிச்சிட்டீங்க’ என்று நெகிழ்ந்தார். பவா விவரித்த கதையின் மையத்தைப் புரிந்து கொள்ளாமல் ‘வெண்ணைக் கட்டியிலேயே’ தங்கி விட்டதுதான் பிக் பாஸ் வீட்டின் வாசகர்கள் செய்த சறுக்கல்

பவா எச்சில் துப்பும் விஷயத்தைப் பற்றியும் சுருக்கமாகப் பேசிய கமல் ‘சுகாதாரம் முக்கியமான விஷயம்’ என்று சொல்லி, அவரை அதிகமாக சங்கடப்படுத்த வேண்டாம் என்று கருதி உடனே அடுத்த விஷயத்திற்குத் தாவியது நாகரிகமான விஷயம். “அடுத்த வார கேப்டன் யாருன்னு முடிவு பண்ணீட்டிங்களா.. சரி.. நாளைக்குப் பார்க்கறேன்’ என்று விடைபெற்றுக் கொண்டார் கமல்.

அவர் சென்ற பிறகு அடுத்த வார கேப்டனுக்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் பெரிய பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜோவிகாவும் சரவணனும் சின்ன பிக் பாஸ் வீட்டிலிருந்து நிக்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் மூவருக்கும் நடந்த போட்டியில் சரவணன் வென்று அடுத்த வாரத்தின் தலைவர் ஆனார். அனைவரையும் அனுசரித்து இனிமையாகப் பழகும் குணததைக் கொண்ட சரவணன் சிறந்த தலைவராக இருக்கலாம்.

  • சுரேஷ் கண்ணன்
  • நன்றி – விகடன்
  • (விகடன் இணைப்பு)
Share This Article