தென்னிலங்கையில் இன்று காலை இடம்பெற்ற வெவ்வேறு விபத்துச் சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 63 பேர் காயமடைந்துள்ளனனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குளியாப்பிட்டி நகருக்கு அண்மையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான போக்குவரத்துப் பேருந்து ஒன்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவத்தில் மாணவர்கள் 15 பேர் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை,
நிட்டம்புவ,கஜீகமவில் பேருந்து ஒன்று கொள்கலன் பார ஊர்தியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே,
கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை தெனியாய நோக்கிப் பயணித்த பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.