பிக்பாஸ் 07; 03 ஆம் நாள் நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

editor 2

சிந்தனைத் திலகமாகவும் சண்டைக்கோழியாகவும் மாறி மாறி செயல்படும் பிரதீப் ஆன்டனி பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்த சீசனின் முதல் சண்டை, முதல் லவ் டிராக், முதல் அழுகாச்சி சீன் என்று இரண்டாவது நாளிலேயே அனைத்தும் மங்களகரமாகத் தொடங்கிவிட்டன. வீட்டின் மிகப் பெரிய ஏழரையாக ‘கூல்’ சுரேஷ் இருப்பார் என்று பார்த்தால் அந்தப் பட்டத்தை வாங்குவதில் பிரதீப் ஆன்டனிதான் முன்னிலையில் இருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. தொட்டதற்கெல்லாம் சண்டைக்கோழியாக மாறி விடுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 2 EP3)

அதென்னமோ, ஆண் டான்சர்கள் இளம் பெண்களின் மனதை எளிதில் கொள்ளையடித்து விடுகிறார்கள் போல. வந்த முதல் நாளிலேயே மணி சந்திராவிற்கும் பிரவீனாவிற்கும் ஏதோவொன்று ஆரம்பித்திருக்கிறது. அது நட்பாகவும் இருக்கலாம். அல்லது காதலாகவும். எதுவாக இருந்தால்தான் என்ன?! இப்போதெல்லாம் இரண்டிற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிவதில்லை. ‘மூட் அவுட் மாதிரி இருக்கு’ என்று மணி சென்டிமென்ட் அனுதாபத்தை ஆரம்பிக்க, ‘என்னாச்சு சொல்லு… சொல்லு’ என்று விசிலை முழுங்கின குரலில் அவரை செல்லம் கொஞ்சினார் ரவீனா. ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’ மாதிரி இவர்களின் கிசுகிசு உரையாடல் போய்க் கொண்டே இருந்தது. (எந்த டிராக்கா இருந்தாலும் சீசன் முடிஞ்சவுடன் இதுவும் முடிஞ்சுடும்!).

இங்கு இப்படி ரொமான்ஸ் என்றால் அந்தப் பக்கம் ஒரு டிராஜிடி சீன். தூக்கம் வராமல் பாயைப் பிறாண்டிக் கொண்டிருந்தார் பிரதீப். ‘ப்ரோ.. கீழெ என்னென்னமோ எழுதியிருக்கு பாருங்களேன்.. மைண்ட்ல ஏதோ ஓடிக்கின்னே இருக்கு’ என்று அவர் அனத்த, ‘லூஸ்ல விடுங்க ப்ரோ’ என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் யுகேந்திரன். நல்ல வேளை, ‘யாரை லூஸூன்னு சொல்றீங்க?’ என்று பிரதீப் சண்டைக்கு வரவில்லை.

வினுஷா முதன் முறையாக பால் காய்ச்சிப் பழகுகிறார் போல. ‘என்னதிது புஸ்ஸூன்னு வெள்ளையா பொங்கி மேல வருது?’ என்று அவர் சுதாரிப்பதற்குள் அரை லிட்டர் பால் வீண். ‘பால் காய்ச்சி எங்க வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடறீங்க போல’ என்று அந்தச் சமயத்தில் யுகேந்திரன் காமெடி போல ஏதோ சொல்லிய நேரம் ஏழரையாக இருக்க வேண்டும். பிறகு உண்மையிலேயே அப்படித்தான் ஆயிற்று.

சின்ன பிக் பாஸ் செய்த சின்னத்தனமான குறும்பு

‘ஏ.. நீ இங்க வா.. நீயும் இங்க வா.. நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும்’ என்கிற பருத்திவீரன் கார்த்தி மாதிரி, சின்ன வீட்டு மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி ஒன்று திரட்டிய சின்ன பிக் பாஸ், ஒரு ஜாலியான சதி திட்டத்தை தந்தார். சின்ன வீட்டார் சத்தங்களை எழுப்பி பெரிய வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்ப வேண்டுமாம். ‘ஹை ஜாலி..’ என்று உற்சாகமாக கிளம்பியவர்கள், பாத்திரங்களைப் போட்டு விதம் விதமாக உடைத்து இசைக்கச்சேரியே நடத்தி முடித்து பெரிய வீட்டின் திருப்பள்ளியெழுச்சியை வெற்றிகரமாக நடத்தினார்கள். ‘சிந்தனைத் திலகமாக’ மாறி விட்ட பிரதீப் அப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தார்.

இந்த சீசனின் முதல் டாஸ்க் லெட்டர் வந்தது. இதில் இரு வீட்டைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். ‘வீட்டை யார் சுத்தம் செய்வது?’ என்பதை முடிவு செய்யும் போட்டி இது. அந்தந்த வீட்டின் ப்ளூ பிரிண்ட், ஜிக்சா துண்டுகளாகத் தரப்படும். எந்த அணி முதலில் ஒன்றிணைக்கிறதோ, அவர்களே வெற்றி. பெரிய வீட்டிலிருந்து பிரதீப்பும் ஜோவிகாவும் வர, சின்ன வீட்டிலிருந்து நிக்சனும் அனன்யாவும் வந்தார்கள். நிக்சன் தலையைச் சொறிந்து கொண்டே சொதப்பதியதால் பெரிய வீடு வெற்றி பெற்றது. ஆக, பெரிய வீட்டையும் சேர்த்து சின்ன வீட்டார்தான் சுத்தம் செய்ய வேண்டும்.

“உங்களை நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. நல்லா வருவீங்க தம்பி. அடுத்தது பாத்ரூம் க்ளீனிங் போட்டி இருக்கு. அதுலயும் நீங்க தோத்தீங்கன்னா.. ரெண்டு வீட்டு பாத்ரூம் காண்டிராக்ட்டும் உங்களுக்குத்தான். கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும்” என்று தோற்ற அணியை கோபமும் கிண்டலும் கலந்து எச்சரித்தார் பிக் பாஸ்.

இரண்டு டாஸ்க்கிலும் தோற்ற சின்ன வீட்டார்

அடுத்த டாஸ்க் ‘வெல்கம் டு கழுவப் போறது யாரு?’- இதில் சின்ன வீட்டில் இருந்து ரவீனாவும் பெரிய வீட்டில் இருந்து சரவணனும் கலந்து கொண்டார்கள். ‘பெரிய வீட்டு பாத்ரூமில் என்ன பொருட்கள் எல்லாம் இருந்தன’ என்பது தொடர்பான கேள்விகளுக்கு நினைவுப்படுத்தி பதில் சொல்ல வேண்டும். இதில் பல கேள்விகளுக்கு சரவணன் சரியாகப் பதில் சொல்ல ‘அங்க ஒரு நாள்தானே இருந்தேன்?” என்று ரவீனா சிணுங்கியபடியே சொன்னது ஒருவகையில் சரிதான். என்றாலும் சின்ன வீடு தோற்றதால் இரண்டு வீட்டின் பாத்ரூம் க்ளீனிங்கும் அவர்களின் பொறுப்பு. ஒட்டுமொத்த சுமையும் சின்ன வீட்டாரின் மேல் விழுந்ததால், ‘அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமா?’ என்று மைக்கில் மனிதாபிமானத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் மாயா.

பெரிய வீட்டிற்குள் ஒரு கலகவாதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரதீப். அவருக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை, சின்ன வீட்டுப் பக்கம் சென்று ரகசியமாக சில டிப்ஸ்களை தந்து கொண்டிருந்தார். ‘உங்க பக்கம் நானா இருந்தா மணியடிச்சாதான் சமைப்பேன். பர்மிஷன் தந்தாதான் அடுப்பையே பத்த வைப்பேன். சமையல் வரலைன்னா கேவலமா சமைச்சு வைப்பேன்’ என்றெல்லாம் எதிரணிக்கு சதி பாயிண்ட்டுகளை அள்ளி வீசினார். இந்த வரிசையில் அவர் சொன்ன ஒரு பாயிண்ட் சரியாக இருந்தது. அதன் விளைவு சில நிமிடங்களில் தெரிந்தது.

சின்ன வீட்டார் சமைக்கும் போது பெரிய வீட்டைச் சேர்ந்த யுகேந்திரனும் விசித்ராவும் சில உதவிகளைச் செய்தார்கள். இதை விதிமீறலாக எடுத்துக் கொண்ட பிக் பாஸ் அடுத்து செய்த அறிவிப்புதான் சுவாரஸ்யமான டிவிஸ்ட்.

முதல் சண்டையை மங்கலகரமாக ஆரம்பித்த பிரதீப்

விதியை மீறியதால் இருவரும் சின்ன வீட்டிற்கு ஷிப்ட் ஆக வேண்டும். பிக் பாஸ் தந்த இந்த அதிர்ச்சி போதாதென்று கூடுதலாக ஒரு பின்குறிப்பையும் அழுத்தமாகத் தெரிவித்தார். ‘இந்த விஷயம் கடனை அடைக்க உங்களுக்கு பாதகமாக அமையும்’ என்கிற எச்சரிக்கை அதில் இருந்தது. “அப்படின்னா அங்க இருந்து ரெண்டு பேரை இங்க அனுப்புவீங்களா?’ என்று பிரதீப் கூடுதல் ஏழரையைக் கூட்ட முதல் சண்டைக்கான விதை அங்கு முளைத்தது. “ஏன்… இங்க இருக்கறவங்க சேர்ந்து வேலை செஞ்சு கடனைக் கழிக்க மாட்டீங்களா?” என்று விசித்ரா கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.

“ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாதானே பில் போட்டிருக்காங்க?” என்று அடுத்த பாயிண்டை பிரதீப் எழுப்ப ‘ப்ரோ.. இதை க்ரூப்பாதான் சேர்ந்து அடைக்கணும்” என்று கேப்டன் விஜய் சொன்னது சரியா என்று தெரியவில்லை. “சமையல் மெனு என்னைக் கேட்டு செஞ்சீங்களா?” என்று அடுத்த சண்டையை சூட்டோடு சூடாக பிரதீப் ஆரம்பிக்க “அதை டிஸ்கஸ் பண்ணப்போ துண்டை ஆட்டிட்டு இருக்காம வந்திருக்கலாம்ல’ என்று விஜய் சூடாக ‘அவங்க ஹெல்ப் பண்ணப்போ ஒரு கேப்டனா நீங்க ஏன் தடுக்கலை?” என்று அடுத்த ரவுண்டிலாவது ஜெயிக்கலாமா என்று பார்த்து அங்கும் தோற்றுப் போனார் பிரதீப். கேப்டனுக்கான அதிகாரத்தை விஜய் சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பது சிறப்பு.

யுகேந்திரனும் விசித்ராவும் சின்ன வீட்டிற்கு இடம் பெயர்ந்தார்கள். வாதத்தில் தோற்றதின் கோபம் இன்னமும் பிரதீப்பிடம் போகவில்லை. எனவே அடுத்த பஞ்சாயத்தை உடனே ஆரம்பித்தார்.
ஆவேசமாக எழுந்து சென்று ‘மெனு போர்டில்’ சிக்கன் ஃபிரை என்று எழுதி விட்டு ‘இப்ப எனக்கு வேணும். எனக்கு மட்டும் வேணும்’ என்றெல்லாம் சொன்னது அராஜகம். சின்னப் பையனாக இருந்தாலும் இந்தச் சமயத்தில் நிக்சன் சொன்னது ஒரு சரியான ‘லா பாயிண்ட்’. ‘டீ.. காஃபி மட்டும்தான் எப்ப வேணா கேக்கலாம். மெனுன்றதை காலைல சொல்லிடணும். திடீர்ன்னு வந்து கேட்டா எப்படி?” என்று நிக்சன் சொன்னது சரியானது. இந்தப் பஞ்சாயத்தை யுகேந்திரன் தணித்து வைத்தார்.

வீடு என்பது தனிநபரின் பிரதேசமல்ல

பிரதீப் அந்த இடத்தை இன்னமும் ‘வீடாக’ உணரவில்லை என்பதுதான் இதற்குப் பொருள். ‘நான்’.. ‘எனக்கு’ என்று சுயநலமாகவே யோசிக்கிறார். என்னதான் இது தனித்தனி போட்டியாளர்கள் ஆடும் விளையாட்டு என்றாலும் பல விஷயங்களில் ‘நம் வீடு’ என்கிற புரிதல் இருந்தால்தான் நடைமுறை வாழ்க்கைக்கும் அது ஒத்து வரும். “அப்ப என் பொருளையெல்லாம் எனக்கு கொடுத்துடுங்க’ என்று சிறுபிள்ளைத்தனமாக கோபப்பட்ட பிரதீப்பிடம் “தம்பி..மொதல்ல உங்க டீம் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க” என்று பவா தலையிட்டது புத்திசாலித்தனம்.

ஐஷூ எதற்கோ ஃபீல் ஆகி ரகசியமாக கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்க அவரை ஆறுதலாக விசாரித்தார், புது விருந்தினரான விசித்ரா. ஐஷூ ‘ஹோம் சிக்’-ஆல் அவதிப்படுகிறாராம். மாமா, மாமியிடம் சொல்லி விட்டு வரவில்லையாம். ‘என் வீட்டில் பிக் பாஸ் வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். நான்தான் அடம்பிடித்து வந்தேன்’ என்று ஆரம்பத்தில் சொன்ன ஐஷூவிற்கு பிக் பாஸின் ரூல்ஸ் தெரியும்தானே? அது சரி, பெண்கள் கண்ணைக் கசக்குவதற்கு காரணமா வேண்டும்?! ‘அவங்க டிரஸ்ஸிங் சரியில்ல’ என்று ஐஷூவைப் பற்றி முன்பு புகார் சொன்ன அதே விசித்ராவே, இப்போது முன்வந்து ஆறுதல் சொன்னது நல்ல விஷயம்.

காலையில் சமையல் பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பியதன் காரணமாகவோ, என்னவோ மாலை ஆறு மணிக்கு ‘வேக் அப்’ பாடலை ஒலிபரப்பினார் பிக் பாஸ். ‘நாங்க வேற மாறி’ என்கிற பாடல் ஒலிக்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக ஆடித் தீர்த்தார்கள். சுரேஷ் தரையில் உருண்டு பாம்பு டான்ஸ் எல்லாம் ஆடினார்.

கோல்டன் ஸ்டார் பரிசும் கிசுகிசு விளையாட்டும்

அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இவ்வாறாக தொடர்ந்து நடத்தப்படும் டாஸ்க்குகளில் வெல்பவர்கள், ‘கோல்டன் ஸ்டார்’களை பெற முடியும். அதிக எண்ணிக்கையிலான கோல்டன் ஸ்டார்களை ஒருவர் வென்றால், அது அவர்களுக்கு எலிமினேஷன் ஆபத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒருமுறை உதவும். பத்தாவது வாரம் வரை இதை உபயோகிக்கலாம்.

‘Know Your Housemates’ என்பதுதான் புதிய டாஸ்க். யாராவது ஒரு போட்டியாளரின் பெயரை வீட்டார் சொன்னால், அவர் தொடர்பான ஆறு கிசுகிசுக்கள் போர்டில் எழுதி வெளியிடப்படும். அதில் மூன்று சரியான கிசுகிசுக்களை கண்டுபிடித்து அதை வைத்து கற்பனை கலந்து ஒரு கதையாக மாற்றி சொல்ல வேண்டும். இதில் திறமையாக கதை சொல்பவருக்கு கோல்டன் ஸ்டார் பரிசு.

முதலில் வந்த சரவணன் ‘கூல் சுரேஷ்’ பற்றிய கிசுகிசுக்களில் மூன்றைத் தேர்ந்தெடுத்து ‘முதல்ல ஐஸ்கிரீம் கடை வெச்சாப்பல.. ரீசார்ஜ் கடை வெச்சாப்பல.. எல்லாமே லாஸ்.. அப்படியே தியேட்டர் பக்கம் வந்து சினிமா பத்தி பேசினாப்பல.. இப்ப என்னடான்னா.. டாம் க்ரூஸே இவரோட பிரமோஷனுக்காக காத்திருக்காரு’ என்கிற ரேஞ்சிற்கு கதை சொல்லிச் சென்றார்.

அடுத்ததாக வந்த கூல் சுரேஷ், விஷ்ணு பற்றிய கிசுகிசுக்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய பாணியில் கதையாக விவரித்தார். ஆனால் அது பெரும்பாலும் சிம்புவின் கதை மாதிரியே தெரிந்தது. தன் மீதான கிண்டல்களுக்கு விஷ்ணு ரசித்து சிரித்தார். ஜனரஞ்சகமான முறையில் சுரேஷ் சொன்ன விதத்தை வீடு நன்றாகவே ரசித்தாலும் பரிசு கிடைத்தது என்னமோ சரவணணுக்குத்தான்.

‘சிறியவர்கள் நட்பாக இருக்க, பெரியவர்கள் தவறு செய்து தண்டனை பெறுகிறார்கள். இவர்களின் உண்மையான நிறங்கள் வெளிப்படுகின்றன. இனி என்னென்ன ஆகுமோ?’ என்கிற நாரதர் கலக வாய்ஸூடன் இந்த எபிசோட் நிறைவடைந்தது.

  • சுரேஷ் கண்ணன்

Share This Article