ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான தனியார் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு பணம் வசூலிப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறுகியகால கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களின் சட்டவிரோத செயல்களால் பலர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவற்றில் பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன. மற்றும் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளுக்கு குறுஞ் செய்தி அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்கின்றன.
மேலும், இந்த நிறுவனங்களின் கைத்தொலைபேசி அப்ளிகேஷன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கைத்தொலைபேசிகளின் தரவுகள் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி இல்லாமலோ, குறைந்த வட்டியிலோ கடன் பெறும் வசதியும், குறுகிய காலத்தில் கடன் பெறும் வசதியும் இருப்பதால் இந்த நிறுவனங்களில் ஒன்லைன் மூலம் கடன் பெற பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனினும், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கிய பின், தங்களுக்கு உறுதியளித்த வட்டியை, தன்னிச்சையாக மாற்றி, அதிக வட்டிக்கு பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.