கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

editor 2

2009 ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இம்முறையும் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை அலெக்ஸாண்டிரா வீதி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை கடந்த சில வருடங்கள் போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இதனையும் மீறி பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்தனர்.

அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என சமூகத்தின் பல தரப்பட்டவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் செயற்படும் சுதந்திர பாலஸ்தீன அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டுநிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நினைவேந்தல் நினைவில் கவிதை வாசித்தல், உரைகள் போன்றவையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

Share This Article