கனடா – இந்தியா இடையிலான முறுகல் நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் நிலையில் கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் அமைப்பின் மற்றொரு செயற்பாட்டாளரின் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் இந்திய தேசிய புலனாய்வு முகமையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
காலிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் (Gurpatwant Singh Pannu) சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை பறிமுதல் செய்துள்ளது.
சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அறிவிக்கை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பன்னுவின் வீட்டிலும் விவசாய நிலங்களின் முன்பும் ஒட்டப்பட்டுள்ளது. சீக் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் குர்பத்வந்த் சிங் பன்னு, காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.
அவரை இந்திய மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்து தேடி வருகிறது.
பன்னு நடத்தி வரும் சீக் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது கனடாவில் உள்ள குர்பத்வந்த் சிங் பன்னு, அங்குள்ள இந்துக்களை இந்தியா திரும்புமாறு மிரட்டி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பன்னுவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை இந்திய தேசிய புலனாய்வு முகமை தீவிரப்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரம் இரு நாடுகளிடையே மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.