இந்தியத் தலைவர்களை சந்திக்க கப்பலில் செல்வது தடுக்கப்பட்டால் விமானத்தில் செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்போம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனிதப்பிரகாஷ் தெரிவித்தார்.
வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய ஆத்துமீறிய ரோலர் படகுகளினால் வடமாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எமது பாதிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமாக கடிதங்களை அனுப்பியும் இதுவரையும் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே எமது பிரச்சினை தொடர்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் குப்புசாமி அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நேரடியாகச் சந்தித்து பேச உள்ளோம்.
கடல் வழியாக எமது பயணம் விரைவில் இந்தியா நோக்கி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் எமது பயணம் கடற் படையினரால் தடுக்கப்படுமாயின் உண்டியல் மூலம் பணம் சேர்த்து விமான மூலம் தமிழ்நாடு செல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.