பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கண்டனம்!

editor 2

சனல் 4 காணொளி ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கொழும்பு பேராயர் இல்லம் வன்மையாக கண்டித்துள்ளது.

குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தாமல் அதனை உடனடியாக நிராகரிப்பது பொருத்தமற்ற செயற்பாடு என கொழும்பு பேராயர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உத்தியோகப்பூர்வமாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தற்கொலை குண்டுதாரிகளுடன் சந்திப்பை நடத்தியதாகவும் குறித்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு சனல் 4இன் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக நேற்று அறிவித்திருந்தது.

இந்தநிலையில், கொழும்பு ஆயர் இல்லம் குறித்த அறிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த காணொளியில் உள்ள சில விடயங்கள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும், இதில் சந்தேகத்திற்குரிய பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக பிள்ளையானின் நடவடிக்கைகள், தற்கொலை குண்டுதாரிகள் போன்ற சில வெளிப்படுத்தல்கள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.

மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேவை தூக்கிலிடவோ, கோட்டாபயவை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவோ கோரவில்லை.

மாறாக இந்த காணொளி வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தீவிரமாக விசாரித்து பின்னர் அறிக்கை வெளியிட வேண்டும் என ஆயர் இல்லம் கோரியுள்ளது.

இந்தநிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share This Article