கொவிட் தொற்றில் 16ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். அவர்களில் எத்தனை பேரின் சடலங்கள் எரிக்கப்பட்டன என்ற தகவலை பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அந்த பட்டியலை வழங்கவில்லை. அது தொடர்பான சில விடயங்களை மறைப்பதற்கு நீங்கள் முயற்சித்து வருகிறீர்கள்.
அதனால் இந்த தகவல்களை வழங்காவிட்டால் நாம் சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தை நாடுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 3ஆம் நான் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றில் 16ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். அவர்களில் எத்தனை பேர் எரிக்கப்பட்டார்கள் என நான் பாராளுமன்றத்தில் பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அந்த பட்டியலை வழங்கவில்லை. அது தொடர்பான சில விடயங்களை மறைப்பதற்கு நீங்கள் முயற்சித்து வருகிறீர்கள். அதனால் இந்த தகவல்களை வழங்காவிட்டால் நாம் சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தை நாடுவோம்.
மேலும் தற்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த விடயங்களில் ஓரளவு தொடர்பு உங்களுக்கும் இருக்கிறது. ஏனெனில் ராஜபக்ஷ் அரசாங்கத்தில் ஊடகப்பேச்சாளராக பல வருடங்கள் இருந்தீர்கள்.
அதனால் தற்பாேது வெளிவந்திருக்கும் தகவல்களில் திரிபோலி குழு தொடர்பிலும் வெளிவந்திருக்கிறது. இந்த குழு அரச அனுசரணையுடன் செயற்பட்டுவந்தது. இந்த குழுவுக்கு பல கொலைகளுடன் சம்பந்தம் இருப்பது தொடர்பில் தகவல் வெளிவந்திருக்கிறது. தற்போது அரசாங்கத்திலுள்ள இராஜாங்க அமைச்சர் தொடர்பிலும் பேசப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி திரிபோலி குழு தொடர்பில் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பிட்டனர். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரும் இதுதொடர்பில் தெரிந்திருக்கிறார். சஹ்ரானின் குழுவை இந்த குழுவுடன் இணைத்துவிட்டு, தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்திக்கொண்டு அதனை மறுத்துவருகின்றனர்.
கோத்தாபய ராஜபக்ஷ்வும் தற்போது இந்த குழு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதனால் இந்த வெளிப்படுத்தல் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு அரசாங்கம் எவ்வாறு பதில் அளிக்கப்போகிறது.
அத்துடன் தற்போது பேராயர் கார்தினலையும் தூற்றுகின்றனர். மனுஷவும் ஹரினுமே அபு ஹின் மற்றும் சொனிக் சொனிக் தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தனர். இந்த விடயங்கள்தான் தற்போது வெளிப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதில் எதுவும் இடம்பெறுவதில்லை.
அரசியல் நோக்கத்தை அடைந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட இந்த சதித்திட்டம் தொடர்பாக கலாநிதி ராஜன் ஹூல் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 6மாதங்களில் எழுதிய புத்தகத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவும் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த விடயங்கள் வெளிவந்துள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் மறைந்துள்ள சக்தி தொடர்பில் கார்தினாலும் கதைத்தார். அரசாங்கத்திலுள்ள இரண்டு அமைச்சர்களும் அதனை வெளிப்படுத்தினர். அதனால் இதுதொடர்பாக நாம் விவாதமொன்றை கோரியுள்ளோம். அதில் ஆதாரங்களுடன் பல விடயங்களை நிரூபிப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றேன் என்றார்.