காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயதான சிறுமியினுடைய, கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த தாதியொருவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
4 நாட்களுக்கு மேலாக நிலவிய காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் – மல்லாகம் – பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி யாழ்ப்பாணம் பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது இடது கையின் மணிக்கூட்டுக்கு கீழ் பகுதி சத்திரச் சிகிச்சையின் ஊடாக துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.