சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை சுட்டுக் கொல்லுமாறு கோட்டாபய ராஜபக்ஷவே எம்மிடம் கூறினார் என்று சனல் – 4 ஆவணப்படத்தில் ஆஸாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்கு தல்களின் பின்புலம் தொடர்பான ஆவணப்படத்தை பிரித்தானியாவின் ‘சனல் 4’ தொலைக் காட்சி வெளியிட்டது. இந்தகாணொளி இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘சனல் 4’ வெளியிட்டுள்ள ஆவணப் படத்துக்கு SRI LANKA’S EASTER BOMBINGS: DISPATCHES எனப் பெயரிடப்பட்டுள்ளது.
47 நிமிடங்களும் 9 செக்கன்களையும் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணப்படம், ஈஸ்டர் ஞாயிறு தின குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகள் மற்றும் தாக்கு தல் காட்சிகளுடன் ஆரம்பமாகிறது.
கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் பலரின் கருத்துகள் ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
‘அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காவும் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கொள்வதற்காகவுமே குறித்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன’, என அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்து தற்போது சுவிற்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளவரான ஆசாத் மௌலானா பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்தொடர்பில் இலங்கையின் மூத்த புலனாய்வு தலைவர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக ஆசாத் மௌலானா ‘சனல் 4’வின் ஆவணப்படத்துக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
‘இந்த தாக்குதல்கள் ஓரிரு நாட்களில்திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் முழுமையாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல். தாக்குதல் சம்பவம் தொடர்பில் மறுக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரம துங்கவைக் கொல்ல வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அந்தச் சமயத்தில் லசந்தவை ‘நாய்’ என்று விளித்திருந்தார்.
மத தீவிரவாதத்தில் ஈடுபட்ட சிறைச்சாலை கைதிகளை சந்தித்து பேச்சு நடத்துமாறு பிள்ளையான் என்னிடம் கூறினார்.
அதற்கமைய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹாரான் ஹாஷிமின் சகோதரர் மௌலவி சைனிஹாஷிமை நான் சந்தித்தேன். மௌலவி சைனி ஹாஷிம் எமக்கு மிகவும் பயன்படுவார் என பிள்ளையான் என்னிடம் தெரிவித்தார்.
பிள்ளையானின் ஆலோசனையின் படி சட்டத்தரணி ஒருவரை நியமித்து சிறையில் இருந்த மௌலவி சைனி ஹாஷிமை பிணையில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
பின்னர் 2018 ஜனவரி , அந்தக் குழுவிற்கும் அரச புலனாய்வு சேவையின் தற்போதைய தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு பிள்ளையான் எனக்கு கட்டளையிட்டார்.
அதன் பின்பு கடந்த 2018 பெப்ரவரி சுரேஷ் சாலேவுக்கும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சைனி ஹாஷிம் மௌலவிக்கும் இடையிலான கலந்துரையாடல் கரடிப்புவல் எனும் இடத்தில் தென்னந்தோப்பு ஒன்றில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலுக்கு சைனிஹாசிம் மௌலவி உள்ளிட்ட ஆறு பேர்வெள்ளை வானில் குறித்த இடத்திற்குவருகை தந்தனர்.
இக்கலந்துரையாடலில் சுரேஷ்சாலே, ராஜபக்ஷக்களால் நாட்டில்பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு அதுவே ஒரே வழி எனவும் சுரேஷ் சாலே கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடை பெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் காலை எனக்கு சுரேஷ் சாலேவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது தான் மட்டக்களப்பில் இருப்பதாகவும் என்னை உடனடியாக தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குச் செல்லும்படியும் கூறினார். அங்கு நபர் ஒருவர் தங்கியிருக்கிறார் என்றும் அவரை உடனடியாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வெளியேறுமாறும் சுரேஷ் சாலே என்னிடம் கூறினார்.
மேலும் அந்த நபர் விரும்பும் இடத்தில் இறக்கிவிடுமாறு என்னிடம் சுரேஷ் சாலே கூறினார்.
நான் அவரை வாகனத்தில் ஏற்ற சென்ற வேளையில் எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது, அதனைதொடர்ந்து சிறிது நிமிடங்களில் அதாவது 8:50 மணியளவில் சஹ்ரானின் குழு உறுப்பினர் ஒருவருக்கும் தொலைபேசி அழைப்பு வந்தது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் நான் பிள்ளையானுடன் பேசினேன். என்னை வாயை மூடி மௌனமாக இருக்குமாறு அவர் எச்சரித்தார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியையும் அனைத்து உண்மைகளையும் தெரிந்த என்னை கொலை செய்து விடுவார்கள் என அஞ்சி நான் இலங்கையை விட்டு வெளியேறினேன்’,
ஆஸாத் மௌலானா ‘சனல் 4’ ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிலிருந்து தப்பிச்சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது இதுவே, முதல் முறை என ஆஸாத் மௌலானா சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த ஆவண படத்தில் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் மற்றும் கடந்த 2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றமை போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
யுத்தத்தின் போது ராஜபக்ஷக்களின் ஆட்சியின் கீழ் நடந்த பல்வேறு குற்றச் சாட்டுகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உள்ளடங்கிய காணொளிகளும் இடம் பெற்றுள்ளன.
குறித்த ஆவணப்படத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் குறித்தும் உண்மைத்தன்மையை முன்வைக்கின்றது.
ஆவண படத்தின் நிறைவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தன்மையை இலங்கை பாராளுமன்றத் தின் சிறப்புக் குழு விசாரணை நடத்தியதாக ‘சனல் 4’ தெரிவித்துள்ளது