இலங்கை படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் உந்துசக்தியாகத் திகழ்கிறது – கமால்!

editor 2

இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்வதாகப் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான தொடர்புகளின் 50 வருடப்பூர்த்தியைக் கொண்டாடும் வகையிலான நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருநாடுகளினதும் இராணுவத்தினருக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பன நினைவுகூரப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ‘அயலகத்துக்கு முதலிடம்’ என்ற தமது கொள்கையின் பிரகாரம் இலங்கையின் இயலுமையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இருநாடுகளினதும் படையினருக்கு இடையிலான பயிற்சிகள் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதுடன் அவர்களுக்கு இடையிலான வலுவான பிணைப்புக்கு அடித்தளமிடும் வகையில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை இங்கு உரையாற்றிய பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன, இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பிணைப்பை பல்வேறு பரிமாணங்களில் விரிவுபடுத்துவதற்கு ஏற்றவகையில் உயர்ஸ்தானிகரால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

அதேபோன்று இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், முழுமையான நிதியுதவியுடன் இலங்கை படையினருக்கு வழங்கப்பட்ட செயற்திறன்மிக்க பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தளபதி, கடற்படைத்தளபதி, விமானப்படைத்தளபதி மற்றும் இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article