திருகோணமலை பெரியகுளத்தில் விகாரை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் மறுத்த நிலையில், திருகோணமலை மாவட்டச்செயலகத்தை பௌத்த மதகுருமார்கள் முற்றுகையிட்டனர்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும் போது, மாவட்டச் செயலகத்திற்கு வெளியே, பௌத்த மதகுருக்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்தமதகுருக்கள், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைந்து, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை இடைநடுவே தடுத்து, அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பௌத்த மதகுருக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய கிழக்கு மாகாண ஆளுநர், பௌத்த மதகுருக்கள் அபிவிருத்திக் கூட்டத்தில், அடாத்தாக நுழைந்து
குழப்பம் விளைவித்தமை தவறான முன்னுதாரணம் எனச் சுட்டிக்காட்டினார்.
பெரியகுளம் விகாரை தொடர்பில், அரசாங்க அதிபரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சுட்டிக்காட்டினார்.
உரிய அனுமதியின்றியும், தமிழ் மக்கள் பெருமளவாக வாழும் பகுதியில், விகாரை அமைக்கும் செயற்பாடு, உரிய சம்பாசனைகளுடன் மாத்திரமே இடம்பெறவேண்டும்
என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பௌத்த மதகுருமார்களிடம் எடுத்துரைத்தார்.