இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தல், பெண்கள் ஊக்குவிப்பு, சூழலியல்சார் நடவடிக்கைகள் என்பவற்றுக்காக இவ்வருடம் 4 உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகரகமானது இலங்கை மற்றும் மாலைதீவில் இயங்கிவரும் உள்ளகக் கட்டமைப்புக்களுக்கான வருடாந்த நிதியுதவியின் மூலம் அக்கட்டமைப்புக்கள் திறம்பட இயங்குவதற்கும், அதனூடாக நாட்டின் சமூகக்கட்டமைப்பு முன்னேற்றமடைவதற்குமான பங்களிப்பினை வழங்கிவருகின்றது.
அதன்படி 2023 – 2024 ஆம் ஆண்டில் உள்ளக செயற்திட்டங்களுக்கான கனேடிய நிதியுதவி நடைமுறையின்கீழ் நிதியுதவி பெறும் கட்டமைப்புக்களின் பட்டியல் கனேடிய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பட்டியலின் பிரகாரம் இம்முறை இலங்கையில் இயங்கும் 4 அமைப்புக்களுக்கும், மாலைதீவில் இயங்கும் 4 அமைப்புக்களுக்கும் நிதியுதவி வழங்கப்படவுள்ளன. இலங்கையைச்சேர்ந்த அமைப்புக்களாக ஈக்குயிற், சூழலியல் அமைப்புக்களின் சம்மேளனம், தேசிய இன ஒருமைப்பாட்டு நிலையம் மற்றும் காதுகேளாதோர், பார்வையற்றோருக்கான பாடசாலை என்பன பெயரிடப்பட்டுள்ளன.
உள்ளக செயற்திட்டங்களுக்கான கனேடிய நிதியுதவி நடைமுறையானது உள்ளகப்பிரச்சினைகளை உரியவாறு கையாள்வதற்கான உந்துதலை இக்கட்டமைப்புக்களுக்கு வழங்குவதுடன் சிவில் சமூகம் மற்றும் இக்கட்டமைப்புக்கள் இயங்கும் பிரதேசங்களில் வாழும் மக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துகின்றது. அந்தவகையில் இம்முறை மேற்குறிப்பிட்ட 4 கட்டமைப்புக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியின் ஊடாக அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தல், பெண்கள் ஊக்குவிப்பு, சூழலியல் மற்றும் காலநிலைசார் நடவடிக்கைகள், அனைவருக்கும் ஏதுவான வளர்ச்சி என்பவற்றை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிதியுதவி வழங்கலின் மூலம் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்குப் பங்களிப்புச்செய்வது குறித்துத் தாம் மகிழ்ச்சியடைவதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.