சிங்கள – பௌத்த மக்கள் 238 பேர் மட்டுமே வாழும் திருகோணமலையின் – குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் 23 விகாரைகள் அல்லது பௌத்த வழிபாட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இன்னும் கட்டுமானப் பணியில் உள்ளன என்று அறிய வருகின்றது.
தென்னமரவாடி கிராம அலுவலர் பிரிவில் பௌத்தர்கள் இருவரே வசிக்கின்றனர். இந்நிலையில், இங்கு சங்கமலை புராண ரஜமகா விகாரை நிறுவப்படுகின்றது. புல்மோட்டை – 4 கிராமஅலுவலர் பிரிவில் 98 பௌத்தர்கள் வாழ்கின்றனர்.
இங்கு, சந்திரபுரபுராண ரஜமகா விகாரை,சிறீ தர்மோதய தகமபன்சல என இரு பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புல்மோட்டை – 02 கிராம அலுவலர் பிரிவில் 9 பௌத்தர்கள் வாழ்கின்றனர். ஆசிரி ஹந்தபுராண ரஜமகா விகாரை அமைபடுகிறது. புல்மோட்டை – 01 கிராமஅலுவவலர் பிரிவில் 42 பௌத்தர்கள் வசிக்கின்றனர்.
இங்கு, சிறீ சத்தர்மயுத்திக புராண ரஜமகாவிகாரை, அத்தனகை கந்த புராண ரஜமகாவிகாரை, யனோஜ புராண ரஜமகா விகாரை, மிகிந்துலேனபுராண ரஜமகா விகாரை என 4 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, திரியாய் கிராம அலுவலர் பிரிவில் 29 பௌத்தர்கள் வசிக்கின்றனர். இங்கு, சப்தமகா பபதாவன சேனசுந்த விகாரை, பத்ம ரஜ பப்பத புராண ரஜமகா விகாரை, தபசு கல்லுகு பன்சல என மூன்று பௌத்த வணக்க ஸ்தலங்கள் நிறுவப்பட்டுள்ளன.
குச்சவெளி கிராம அலுவர் பிரிவில் பிச்சாமல் புராண ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பௌத்தர்கள் இருவரே வசிக்கின்றனர். ஜெயநகரில் 42 பௌத்தர்கள் வசிக்கின்றனர்.
இங்கு சமுத்திர கிரி புராண ரஜமகாவிகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 55 பௌத்தர்கள் வாழும் கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் பம்பரகலை புராண ரஜமகாவிகாரை, தெபரகலை புராண ரஜமகா விகாரை, பாஹிய பவ்வத வனசேனசுந்திர பன்சல, வித்தியலோகா ரஜமகா விகாரை, மகாபோதி விகாரை மற்றும்பௌத்த தியான மண்டபம் என 6 பௌத்த வணக்க ஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, கும்புறுப்பிட்டிவடக்கில் கொக்கரடி மலை புத்தரய வனசேனசுன பன்சல, கொட்டிகுளம் சங்கரயவன சேனசுன பன்சல, மடுக்குளம் தர்மயவன சேனசுன பன்சல என்று மூன்று பௌத்த வணக்க ஸ்தலங்களும் நிலா வெளியில் ஒரு பௌத்தரே வசிக்கும் நிலையில் அங்கு கண்டல் காடு புராணரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பௌத்த வழிபாட்டிடங்கள் பெருமளவானவை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் அமைக்கப்படுவதற்கு நிதியும் அனுமதியும் வழங்கப்பட்டன என்று கூறப்படுகின்றது.
குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில்13 ஆயிரத்து 660 இஸ்லாமியர்களும் 4 ஆயிரத்து 552 இந்துத் தமிழர்களும்வாழ்கின்றனர்.
இதில், 14 விகாரைகள் அல்லது பௌத்த வழிபாட்டிடங்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும், 9 விகாரைகள் அல்லது வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்தில் 1947 ஆம் ஆண்டு கந்தளாய் குடியேற்றத் திட்டம் முதல் காலத்துக்கு காலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. திட்டமிட்ட வகையில் குடிப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்ட இந்த மாவட்டத்தில் தற்போது தமிழ் மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.