முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் சம்பவ இடத்திற்கு கள விஜயம் செய்திருந்தார்கள்.
கள விஜயத்தின் பின்னர் இது தொடர்பாக சட்டத்தரணி ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனிதப் புதைகுழி வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தாெல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தார்கள் அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவாவும் , வேறு நிறுவனமும் பிரசன்னமாகியிருந்தார்கள்.
தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.
ஆகவே அவர்கள் இந்தமாதம் 17ஆம் திகதி அதற்கான திட்டங்களை தாக்கல் செய்ய இருக்கின்றார்கள்.
அதனை தொடர்ந்து 21ஆம் திகதி இந்த அகழ்வு பணி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அது இந்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும் என்றார்.