13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் – விசேட உரையில் ஜனாதிபதி!

editor 2

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று முற்பகல் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி நாடாளுமன்றின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும்.

முடிவெடுப்பதில் எதிர்க்கட்சிகளைக் கருத்தில் கொண்டு, சமத்துவமானதும்இ ஒத்துழைப்புடனானதுமான அரசியல் சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் முறைமை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அதேபோன்று மாகாண சபை முறைமை தொடர்பிலும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் 13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு நாடாளுமன்றில் உள்ள அனைவரும் கலந்துரையாடி, தீர்மானம் ஒன்றை எட்ட வேண்டும்.

இதன் காரணமாகவே சர்வக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

எனினும் சில கட்சிகள் முழுமையாக தங்களது தீர்மானங்களை வெளியிடவில்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் எதிர்கட்சி அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்

அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பாதையில் சென்றால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் அதிகார பகிர்வு காணப்படுகிறது.

மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்குமான அதிகாரம் வெவ்வேறாக குறிப்பிடப்படவில்லை.

மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைக்கும் இடையேயான தொடர்பு உரிய முறையில் இல்லை.

வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்ற போது முரண்பாடு ஏற்படுகிறது.

இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்த பல தலைவர்கள் மாகாண சபையின் ஊடாகவே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.

மாகாண சபை குறித்து கலந்துரையாடும் போது 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கையில் முக்கிய விடயமாக கருதப்படுகின்றது.

அதனை புறந்தள்ளிவிட்டு செயற்பட முடியாது.

மாகாணசபை முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் உரித்துடையதல்ல

இது 9 மாகாணங்களுக்கும் பொறுத்தமானதாகும்.

மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றுவதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது.

இதன்படி நாடாளுமன்றில் உடன்பாடு எட்டப்படுமாயின் மாவட்ட விகிதாசார தேர்தல் முறைமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்கும் உரிமை மற்றும் பெண்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை 25 சதவீதமாக அதிகரித்தல் என மூன்று பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியும்.

தற்போது மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் கருத்துரைக்கும் போது பலர் காவல்துறை அதிகாரம் தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

எனினும் ஏனைய திருத்தங்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்துவோம்.

கட்டம் கட்டமாக முன்னோக்கி செல்ல முடியும்.

முதலில், இறுதியில் ஆரம்பிக்காமல் ஆரம்ப புள்ளியில் இருந்து தொடங்குவோம்.

எனவே, ஏனைய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடி பொதுவானதொரு தீர்மானத்துக்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விளக்கமறியல் கைதிகள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய தண்டனைக் கைதிகள் என மூன்று வகை கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

அவர்களை நீதி அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் மரண தண்டனை கைதிகள் தவிர்ந்த ஏனைய இரண்டு பிரிவினரையும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

அதேநேரம் 11 கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் தேசிய காணி கொள்கையொன்றை உருவாக்குவதை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான முயற்சிகளை காணாமல் போனோருக்கான அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.

இது தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

காணாமல் போனோர் தொடர்பில் 21 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தென்னிந்தியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ள 2 ஆயிரத்து 678 இலங்கையர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அவர்களில், இலங்கையின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் இரண்டையும் வைத்திருக்கும் நபர்கள் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு தகுதியுடையவர்களாவர்.

இந்த ஆவணங்களை வழங்குவதற்கான செயல்முறை இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலத்தின் கணிசமான பகுதிகள் 90 முதல் 92 சதவீதம் வரை படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் இறைமை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட போவதில்லை.

வெளி நிறுவனங்களோ அல்லது வெளிநாடுகளோ நாட்டின் சவால்களை தீர்க்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share This Article