மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக்கூட்டணி ஆகியவற்றின் எம்.பிக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. வடிவேல் சுரேஷ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
மலையக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது.
மலையகப் பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.
இந்த நிதியை எந்தெந்தத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
அனைத்து மலையகப் பிரதிநிதிகளையும் ஒரே தடவையில் சந்திக்குமாறு ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.