வவுனியா – தோணிக்கல் வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கவும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்புக்காக 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிவானால் நேற்று உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தைத் தெரிவிக்க முற்பட்டபோது, “இன்று உங்கள் கருத்தைத் தெரிவித்தால் உங்களை அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும். அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்” – என்று வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் அஹமட் ரசீம் தெரிவித்தார்.
இந்நிலையில் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடரி, கத்தி, இரும்புக்கம்பி என்பன நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜந்து சந்தேகநபர்களையும் நேற்றுப் பகல் வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்திய பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மாலை ஆஜர்படுத்தினர். இதன்போதே சந்தேகநபர்களை 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் சந்தேகநபர்கள் சிறு நோய்களுக்கு உட்பட்டவர்கள் என்பதால் சிறைச்சாலை வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற்றுக்கொடுக்கும்படி நீதிவான் பணித்தார்.