வவுனியா தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு தாக்குதல் நடத்தி வீடொன்றின் மீது தீ வைக்கப்பட்டு 02 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்ற வீடொன்றே இவ்வாறு தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.
இதன்போது 21 வயதுடைய இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
அத்துடன் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
முகத்தை மறைத்துக் கொண்டு அங்கு சென்ற அடையாளம் தெரியாத தரப்பினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு வீட்டுக்கு தீ வைத்திருந்ததுடன் அது தொடர்பான சி.சி.டி.வி காணொளி காட்சிகள் மீட்கப்பட்டன.
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு வவுனியா மாவட்ட நீதிமன்றில் பொலிஸார் நேற்று அனுமதி கோரியிருந்தனர்.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய சந்தேகநபர்களை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு கொலை செய்வதற்காக பணம் செலுத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.