ரணிலின் சர்வகட்சி மாநாட்டில் மலையகக் கட்சிகளும் பங்கேற்பு!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் மலையகக் கட்சிகளும் பங்கேற்கவுள்ளன.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

அதேவேளை, சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தீர்மானித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி. என்பன புறக்கணிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

Share This Article